மோசமடையும் வானிலை! உயிருக்கு போராடும் பலர் - உயிரை பணயம் வைக்கும் விமானப்படையினர்
நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கை பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக முப்படையினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை
பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் விமானப்படையின் BELL-212 விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சீரற்ற வானிலை காரணமாக மஹவ மற்றும் எலுவன்குளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் ஊர்மக்களின் ஆதரவுடன், மஹவ மற்றும் எலுவன்குளம் பகுதிகளில் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம் கலாவெவ பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று (27.11.2025) முதல் தென்னை மரத்தில் சிக்கிய ஒரு நபரும், இன்று (28 நவம்பர் 2025) காலை பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் இருந்த 06 பேரும் இன்று காலை விமானப்படை ஹிங்குரக்கொட முகாமின் எண் 7 ஹெலிகாப்டர் படையைச் சேர்ந்த பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.