சரிவை கண்ட நாடுகளின் கண்காணிப்பு பட்டியலில் இடம்பிடித்த இலங்கை
2022 ஜூனில் குடிமைச் சுதந்திரங்களில் விரைவான சரிவைக் கண்ட நாடுகளின் கண்காணிப்புப் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டதாக உலகளாவிய சிவில் சமூகக் கூட்டமைப்பு (Global civil society alliance ) தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் குடிமை சுதந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகளே இதற்கான காரணம் என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஜூலை 13 அன்று இலங்கையில் பிரதமரின் அலுவலகத்தாலும், ஜூலை 18 அன்று பதில் ஜனாதிபதியாலும் அவசரகால நிலையைப் பிரகடனப்பட்டமை தொடர்பில், உலகளாவிய குடியியல் சமூகக்கூட்டமைப்பு தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை தவிர்க்குமாறு வலியுறுத்து
இந்த நிலையில் சமூகத்தின் அதிருப்தியை நசுக்குவதற்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையை மதிப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை அதிகாரிகளை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பல தசாப்தங்களில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடியிருந்ததை அடுத்து அமைதியான அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகுவதாக 2022 ஜூலை 9 அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்.
அத்துடன் அவர் இலங்கையை விட்டு வெளியேறி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்தார். இதனையடுத்து ஜூலை 13 அன்று ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் விக்ரமசிங்கவின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர். அத்துடன் பொது பாதுகாப்பு பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் நிமித்தம் ஜூலை 18 அன்றும் இலங்கை முழுவதும் மற்றொரு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
போராட்டங்களை ஒடுக்க அதிகாரிகள் கவனம்
இவ்வாறு தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் போராட்டங்களை ஒடுக்க அதிகாரிகள் மீண்டும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.
முந்தைய அவசரகால நிலைகளின் போது நூற்றுக்கணக்கானோரின் தன்னிச்சையான கைதுகள், எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகப்படியான பலாத்காரம் மற்றும் தடுப்புக்காவலில் சித்திரவதை அல்லது மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன.
அத்துடன் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குடும்பங்கள் மற்றும் குடியியல் சமூக அமைப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மோதல் கால குற்றங்களுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்க இந்த சட்டங்கள் தவறின.
உலகளாவிய குடியியல் சமூகக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை
எனவே அதிகாரிகள் அவசரகால நிலையை உடனடியாக நீக்க வேண்டும். அடிப்படை சுதந்திரங்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
அதேநேரம் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மற்றும் பாதுகாப்புப் படையினரால்
போலிக்காரணத்தின் கீழ் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகப்படியான பலத்தை
தொடர்ந்து பயன்படுத்துவது நிறுத்தப்படவேண்டும் என்றும் உலகளாவிய குடியியல்
சமூகக் கூட்டமைப்பு கோரியுள்ளது.