உலக இளையோர் வலைபந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை
12ஆம் ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
தென் கொரியாவின் ஜியொஞ்சு உள்ளக விளையாட்டரங்கில் இன்றையதினம் (17.06.2023) ஹொங் கொங் மற்றும் இலங்கைக்கிடையிலான மூன்றாம் இடத்திற்கான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன்மூலமே உலக இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் விளையாட இலங்கை தகுதிபெற்றுள்ளது.
மலேசியாவும் சிங்கப்பூரும் ஏற்கனவே உலக இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தன.
ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஹொங் கொங்கை 46 - 32 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு இலங்கை 3ஆம் இடத்தைப் பெற்றது.
ஹொங் கொங்குடனான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டி இலங்கைக்கு இலகுவாக அமையவில்லை. இடைவேளைக்குப் பின்னரே இலங்கை திறமையாக விளையாடி வெற்றிபெற்றது.
போட்டியின் கடைசி ஆட்ட நேர பகுதியில் இலங்கை ஒட்டுமொத்தத்தில் 46 - 32 என்ற கோல்களின் அடிப்படையில் ஹொங் கொங் ஐ வீழ்த்தியது.
இலங்கை சார்பாக பாஷினி உடகெதர 30 முயற்சிகளில் 29 கோல்களையும், தில்மி விஜேநாயக்க 23 முயற்சிகளில் 17 கோல்களையும் போட்டனர்.
மலேசியா முதலாம் இடம்
பதினொரு நாடுகள் பங்குபற்றிய ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் மலேசியா 7ஆவது தடவையாக சம்பியனானது.
சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் 49 - 45 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற மலேசியா சம்பியன் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.
இந்நிலையில் முதல் மூன்று இடத்தை பிடித்த அணிகளும் ஜிப்ரோல்டரில் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |