பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது விசாரணை நடத்த தீர்மானம்
கடந்த மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனியில் நடைபெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு பல்கலைக்கழகத்தை சுற்றி நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் மார்ச் 8 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தை சுற்றி நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கோரிக்கை
அதன்படி, அன்றைய தினங்களில் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மனித உரிமை ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதேவேளை, போராட்டங்களின் போது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் போராட்டக்காரர்களைக் கலைக்கப் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பற்றிய முழு அறிக்கையை அளிக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள்
இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.



