தமிழ் கட்சிகளின் சந்திப்பில் பங்கேற்கும் வடக்கு ஆளுநர் - அமைச்சர் டக்ளஸ்
தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இடம்பெறும் சந்திப்பில் வடமாகாண ஆளுநரும் பங்கேற்கிறார் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (04.05.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்ட கலந்துரையாடலின் தொடக்க உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடையத்தில் கரிசனையாக உள்ளார். எதிர்வரும் வாரங்களில் தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் சரியான ஒரு தீர்வை எட்டலாம் என நான் நினைக்கிறேன்.
ஜனாதிபதியின் தீர்வை நோக்கிய செயற்பாடுகளுக்கு தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களும் ஒத்துழைப்பை வழங்குவதோடு ஆலோசனையையும் வழங்க முடியும். அது மட்டுமல்லாது வட பகுதி அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்குவது தொடர்பில் தொடர்பில் ஜனாதிபதி விரும்பும் நிலையில் அதற்கான சரியான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாட உள்ளோம்.
ஆகவே ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல்
திட்டமிட்ட படி இடம்பெறவுள்ளதோடு வட மாகாண ஆளுநரும் பங்கேற்கின்றார் என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.