பொலிஸாரிடம் சிக்கிய இளம் தம்பதியினர்: 18 கடவுச் சீட்டுக்கள் பறிமுதல்
ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பல நபர்களிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த கணவன், மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருணாகல் மாவட்டம் மாவத்தகமை பிலேஸ்ஸ பிரதேசத்தில் சந்தேக நபர்களை மாவத்தகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து வேறு நபர்களின் 18 கடவுச்சீட்டுக்கள், மடிக்கணனி, டெப், மூன்று கையடக்க தொலைபேசிகள், அச்சு இயந்திரம் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிலேஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 24 வயதான கணவனும் மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்படும் போது, மூன்று கடவுச்சீட்டுக்களில் வேறு நபர்களின் பெயர்களில் எடுக்கப்பட்ட விசா முத்திரைகள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான கணவன், மனைவிக்கு எதிராக நிக்கவரெட்டிய விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் மஹாவ நீதிமன்றத்தில் எட்டு வழக்குகளை தொடர்ந்திருப்பதாகவும் அந்த வழக்குகளில் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிலேஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.