தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டார்…! மூன்று அடுக்கு பாதுகாப்பு தீவிரம்: தொடரும் விசாரணை
புதிய இணைப்பு
கரூர் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கரூர் பிரசாரத்திற்கு தாமதமாக வருகை தந்தமைக்கான காரணம், அனுமதி வழங்கப்பட்ட நேரம், கரூரில் என்ன நடந்தது என்பன தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை முன்னிலையாகவுள்ளார்.
இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற அவர் அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பொலிஸார் கூடுதல் பாதுகாப்பு
இவருடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக விஜய் வருகையை ஒட்டி சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி வரும் தவெக தலைவர் விஜய்க்கு போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மூன்று அடுக்கு பாதுகாப்பு
ஏற்கனவே விஜய்க்கு மத்திய அரசின் ”ஒய்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதனுடன் டெல்லி பொலிஸார் கூடுதல் பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.
இதனை தவிர விஜய்யின் தனி பாதுகாவலரும் இருப்பதால் மூன்று அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் இடத்தில் இருந்தே விஜய்க்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்க தொடங்கியுள்ளதுடன், இவர் செல்லும் காருக்கு முன்பும், பின்பும் டெல்லி பொலிஸாரின் வாகனங்கள் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.