ஐரோப்பாவில் இயங்கும் பண மோசடி கும்பல்: கொழும்பில் ஆணும் பெண்ணும் கைது
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளை தேடுதலில் ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான போலி நாணயத்தாளுடன் இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆணும் பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான ஆணும், 45 வயதான பெண்ணும் போலி யூரோ நாணயத்தாளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் உண்டியல் மூலமாக இந்த போலி யூரோ நாணயத்தாளை, இலங்கை நாணயமாக வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் இயங்கும் பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மூலம் இந்த போலி யூரோ நாணயத்தாள் பெறப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
