ரணிலின் கனவில் மண்ணை அள்ளித்தூவிய இலங்கை மக்கள்!
system change என்ற மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்பட்டார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை.எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.
இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக பெற்று அநுர குமார திஸாநாயக வெற்றிபெற்றுள்ளார்.
அரகல போராட்டங்களின் பின்னணி
இருப்பினும், கடந்த காலங்களில் ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரகல போராட்டங்களின் பின்னணியில் அநுரகுமார உள்ளதாக அரசியல் மேடைகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து ராஜபக்சக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து அரகலய அமைப்பு "அதிகளவிலான மாற்றங்களை" கோரிய போதிலும், அதன் பின்னர் எதுவும் நடைபெறவில்லை.
கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, இலங்கையின் நாடாளுமன்றம் அவருக்குப் பதிலாக அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது, அப்போதைய பொருளாதார நிலைக்கான வெற்றியையும் கண்டது.
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து மாற்றத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிபீடம் ஏறினார்.
வீழ்ந்துக்கிடக்கும் ஐக்கிய தேசிய கட்சி
இலங்கை அரசியல் அத்தியாயத்தில் வீழ்ந்துக்கிடக்கும் ஐக்கிய தேசிய கட்சியை மீட்டெடுக்க இந்த வாய்ப்பினை பயன்படுத்திய ரணில் விக்ரமசிங்க பல மறைமுக திட்டங்களை முன்னெடுத்த நிலையில் அந்த முயற்சி பெறும் தோல்வியையே தழுவியது. ரணில் எதிர்பார்த்த அளவில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.
இதனையடுத்து ரணில் மீதான விரக்தியில் தேர்தலை பலர் விரும்பிய நிலையில், பொருளாதார நெருக்கடியின் போது வாக்கெடுப்பை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை தேர்தல் ஆணையத்தின் (ECSL) தீர்ப்புக்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
இக்கட்டான கட்டத்தில் தேர்தலை நிறுத்துவதற்கு, தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தி பொருளாதார நெருக்கடியை மேற்கோள்காட்டியிருந்தார்.
மேலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சக்கர்களை திருப்திப்படுத்த திடீரென்று அவர் முற்றிலும் வித்தியாசமானவராக மாறி பல அரசியல் வித்தைகளை செய்து வந்தார்.
பொருளாதார நெருக்கடியின் மோசமான நிலை
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் மோசமான நிலை முடிந்துவிட்டதாக அறிவித்த பின்னணியில் வரி குறைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு திட்டம் போன்ற வாழ்க்கைச் செலவை உயர்த்திய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி அதிருப்தியை வலுவாக சம்பாதித்திருந்தார்.
இந்த காலக்கட்டத்திலேயே இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகி ரணில் அரசியல் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை மறுமலர்ச்சி செய்யும் ரணிலின் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ,தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து தானாகவே வெளியேறியிருந்தாலும் மீண்டும் இலங்கையில் அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக்கட்சி இடம்பிடிப்பதென்பது ரணிலுக்கு எட்டாக்கனியாகவே மாறிள்ளது......!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |