வடக்கு மற்றும் கிழக்கில் கட்டுப்பணம் செலுத்திய தமிழ் கட்சிகள் (PHOTOS)
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான தேர்தல் முகவர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 4 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வி.சங்கரலிங்கம் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
சின்னத்திற்கு மாத்திரம் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே மக்கள் வாக்களித்தனர் என்பதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகிய நாம் இன்று கட்டுப்பணத்தினை செலுத்தியிருக்கின்றோம். இதுவரை காலம் வேறு சின்னத்தில் போட்டியிட்ட நாங்கள் இம்முறை குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
கடந்த காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணியானது உதயசூரியன் சின்னத்தினை தமதாக்கி வெளியே சென்றிருந்தனர். அதேபோல தற்போது தமிழ் கூட்டமைப்பில் இருந்து வீட்டுச்சின்னத்தினை தமிழரசுக்கட்சியினர் எடுத்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில் நாங்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கின்றோம். கடந்த காலங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது அந்த சின்னத்திற்கே மக்களிடம் செல்வாக்கு உள்ளது எனவே தனித்து போட்டியிட்டால் அதிகளவான ஆசனங்களை பெறமுடியும் என்று அனைவரும் நினைத்தனர்,
அந்த விபரீதமான முடிவை தமிழர் விடுதலைக்கூட்டணி எடுத்து வரலாற்று பிழையை ஏற்படுத்தியிருந்தது. அதே போல சின்னத்திற்கும் தங்களிற்கும் தான் வாக்களிக்கின்றார்கள் என்ற பிழையான முடிவினை தமிழசுக்கட்சியினர் இன்று எடுத்துள்ளனர்.
ஆனால் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளினை வழங்கியுள்ளார்கள் என்பதினை இந்த தேர்தல் நிரூபிக்கும். தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பானது தமிழரசுகட்சியின் பிளவினால் ஒருபோதும் பின்னடைவை சந்திக்காது.
அதேபோல வடகிழக்கு மாகாணங்களில் குத்துவிளக்கு சின்னத்திலே போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அதிகமான சபைகளை கைப்பற்றுவோம் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம். தமிழரசுக்கட்சி செய்த வரலாற்று பிழையினை எமது வெற்றியானது புலப்படுத்தும். அதனை உணர்ந்து மீண்டும் அவர்கள் இணைவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தலை நாம் சந்திக்க தயாராகியிருக்கிறோம்” என்றார்.
மட்டக்களப்பு
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தொடர்ச்சியாக கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 07 உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று (19.01.2023) தமிழர் விடுதலைக்கூட்டணி கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருண்தம்பிமுத்து தலைமையில் நேற்று (19.01.2023) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசசபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் லிங்கராஜா மற்றும் ஓட்டமாவடி பிரதேசசபையின் பிரதான வேட்பாளர் கலாநிதி முகம்மது புஹாரி முஸமில் ஆகியோர் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று (19.01.2023) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தலைமையிலான ஜனநாயக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளில்
போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.


ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
