சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! இதுவரை 40 பேர் பலி என தகவல்- 100 பேர் படுகாயம்..
புதிய இணைப்பு
சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் இன்று(1) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாக பொலிஸார் மேற்கோள்காட்டி புளு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிராந்திய நாளிதழான லீ நோவாலிட் (Le Nouvelliste) சுமார் 40 பேர் வரை தீயில் கருகி உயிரிழந்ததாக நம்புவதாக கூறுகின்றது.
100 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும், இதுவரை இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் சரியான விபரங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
தற்செயலாக இடம்பெற்ற விபத்தா அல்லது நாசகார செயற்பாடுகளின் விளைவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எவற்றையும் பொலிசார் வெளியிடவில்லை.
குண்டுவெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், வெடிப்பு நடந்த நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் பாரில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
முதல் இணைப்பு
சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று(31) இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
பலர் பலி
இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில் நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Crans Montana 🇨🇭 pic.twitter.com/bHwLSDN7Mb
— NIO 🇨🇭 Investor (@NIOSwitzerland) January 1, 2026
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.
வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது.