இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச நீதிமன்றுக்கு செல்லப்போவதாக எச்சரிக்கும் தொழிற்சங்கம்!
தமது பணிப்புறக்கணிப்பு உரிமையை இலங்கை அரசாங்கம் நசுக்குவதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றுக்கு செல்லப்போவதாக அரச செவிலியர் அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கான முன்னெடுப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
இலங்கையில் தொழிற்சங்க கட்டளைச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களான ஒழுங்கமைக்கும் உரிமை உள்ளது.
எனினும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தமது உரிமையை அரசாங்கம் நசுக்கியுள்ளது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிலியர்களின் குறைகளை நிவர்த்திக்க சுகாதார செயலாளர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் முயற்சிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைக்கு நீதிமன்ற உத்தரவை மதித்து அரச செவிலியர் அதிகாரிகள் சம்மேளனம் தமது பணிப்புறக்கணிப்பை விலக்கிக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 65ஆயிரம் சுகாதாரத்துறை பணியாளர்களால் கடந்த 5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனால் மருத்துவமனைகளின் பணிகளில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டிருந்தது.



