நாடளாவிய ரீதியில் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ள 10,000 பேருந்துகள்
தனியார் பேருந்துகளுக்கு, இ.போ.ச டிப்போக்களில் உரிய முறையில் எரிபொருளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதால், இன்று தொடக்கம் 50 சதவீத தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலம் நாளாந்தம் 800,000 லீற்றர் டீசல் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வழங்கப்பட்ட இணக்கப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை
இந்த தீர்மானத்திற்கமைய, இந்த வாரம் 70% க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் சேவையில் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக பொது போக்குவரத்தை முடிந்தவரை பயன்படுத்துமாறும் பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.