இலங்கை மத்திய வங்கி சுயாதீனமடைந்தால் மட்டுமே அது சாத்தியம்! இலங்கையின் நெருக்கடி தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்
இலங்கை மத்திய வங்கி சுயாதீனமாக இயங்கு பட்சத்தில் மாத்திரம் தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய வங்கியினை சுயாதீனமான இயங்கும் வழிவகைகளை ஏற்படுத்துவோம். தற்போது ராஜபக்ச அரசாங்கம் மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய அதிகரிப்புக்களைச் செய்துள்ளார். ஆனாலும் தனியார் துறை மற்றும் சுயதொழில் புரிவோர் குறித்து சிந்திக்கவில்லை.
சம்பள உயர்வு இதற்கு தீர்வாக அமையாது மாறாக பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். மத்திய வங்கி ஸ்திரத்தன்மையினை அடைய வேண்டும். பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய வங்கிக்கு உள்ளது. அதனை அவர்கள் செய்ய வேண்டும்.
நாட்டில் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில் பணத்தினை அச்சடிக்கும் வேலையினை அரசாங்கம் செய்து வருகின்றமை பாரிய ஆபத்தாகும். இதனால் நாடு இன்னும் அதள பாதாளத்திற்கு போகும் என்பதே உண்மை.