விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மருத்துவத்துறையில்மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் அவசியமற்ற விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளுமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் பல முக்கியமான மருந்து வகைகள் கையிருப்பில் இல்லை. இதனால் தேவையில்லாமல் வாள்வெட்டு சம்பவங்கள், வீதி விபத்துக்களில் காயமடைதல், குளங்களில் மூழ்குதல் போன்ற அவசியமற்ற விடயங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருந்து தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்
தேவையில்லாமல் வாள்வெட்டு சம்பவங்கள், வீதி விபத்தில் காயமடைதல் குளங்களில் மூழ்குதல் போன்ற அவசியமற்ற விடயங்களில் தேவையில்லாமல் காயமடைந்து வருபவர்களுக்கு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளும் போது உண்மையான தேவையுடைய நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை செய்ய முடியாமல் போகின்றது.
அத்துடன் சுப்பர் பெட்ரோல் இல்லாத காரணத்தால் மன்னார் மாவட்டத்தில் 5 நோயாளர் காவு வண்டிகள் இயங்காமல் இருக்கின்றது. வீதி விபத்துக்கள், வாள்வெட்டு காயங்கள் போன்ற பலவிதமான அவசர மருத்துவ சேவைக்கு வருபவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளதுடன், உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.
அண்மைய நொச்சிக்குளம் சம்பவம் கூட மிகவும் கவலைக்குரிய விடயமே.
எனவே தற்போதைய நாட்டினதும்,ஒவ்வொரு குடும்பத்தின் நெருக்கடியான சூழ்நிலைகளை
கருத்தில் கொண்டு களியாட்டங்கள், வாள்வெட்டு சம்பவங்கள், வீதி விபத்துக்கள்
போன்ற மனித குலத்திற்கு தேவையில்லாத செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் தர்மராஜா
வினோதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



