இலங்கையின் தொடரும் அவலம்! பாடசாலை மாணவியின் பகல் உணவாக மாறிய தேங்காய்த்துண்டுகள்
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிறுவர்கள் படும் சிரமங்கள் முடிவற்றவை.பசியினால் பாடசாலையில் புத்த பூஜைக்கு வைக்கப்பட்ட உணவை இரண்டு மாணவர்கள் உட்கொண்ட சம்பவமும், மிளகாய் தூள் தூவி மாணவியொருவர் உணவு உட்கொண்ட சம்பவமும் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் உள்ளது.
பாடசாலை மாணவியின் பகல் உணவாக மாறிய தேங்காய்த்துண்டுகள்
அந்த வகையில், மினுவாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் பகல் உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்து உட்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மாணவியின் தந்தை கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும்,மாணவிக்கு மேலும் இரண்டு சகோதரர்கள் உள்ள நிலையில், கடும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த மாணவி பாடசாலை இடைவேளையின் போது ஏனைய மாணவர்களுடன் பகலுணவாக தேங்காய் துண்டுகளை உட்கொண்டதினை அவதானித்த ஆசிரியர் உடனடியாக ஏனைய ஆசிரியர்களுடன் கலந்துரையாடி இதுபோன்ற சில குழந்தைகளுக்கு உணவினை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
பசியில் வாடும் மாணவர்கள்
இந்நிலையில், குறித்த பாடசாலையில் மினுவாங்கொடை பகுதியில் உள்ள வருமானம் குறைந்த பல மாணவர்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் கோசல கருணாரத்ன, போசாக்கு குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய சிறுவர்கள் தமது வைத்தியசாலைக்கு வருவது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரிக்கும் என குடும்ப சுகாதார பணியகத்தின் தாய் மற்றும் குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.