உலக வங்கியின் கடுமையான விதிமுறைகளுடன் உர இறக்குமதி
மோசடி மற்றும் ஊழலற்ற செயல்முறையை உறுதி செய்வதற்காக உலக வங்கியால் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளுடன் உர இறக்குமதிக்கான சர்வதேச போட்டி ஏலங்களை இலங்கை திறந்துள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் இந்த வழிகாட்டுதல்களின் படி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள் உலக வங்கி குழுவிற்கு கொள்முதல் செயல்முறை தொடர்பான பதிவுகள், கணக்குகள் மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்வதற்கும், உலக வங்கியால் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர்களால், கணக்காய்வு செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.
உலக வங்கி வழங்கும் 350 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிதி வசதியின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வரவிருக்கும் பெரும் போகத்துக்கு 125,000 மெட்ரிக் தொன் யூரியாவைக் கொள்முதல் செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
உலக வங்கியின் நிதியுதவி
அதன்படி, மொத்த உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய அவசரகால நெருக்கடி நிலை பணித் திட்டத்தில் இருந்து 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள், பெறுமதியான யூரியா, பெரும் போகத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படும்.
இந்த திட்டம் செப்டம்பர் 15 ஆம் திகதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக வங்கி வழிகாட்டுதல்களின்படி, பெயர், முகவரி மற்றும் நிதியின் அளவு உள்ளிட்ட ஏலச் செயல்முறை தொடர்பாக முகவர்களுக்கு செலுத்தப்பட்ட ஏதேனும் தரகு அல்லது கட்டணங்களை ஒப்பந்ததாரர் வெளியிட வேண்டும் என்று கோரப்படும்.
ஏலச்சமர்ப்பிப்பு காலக்கெடு
சர்வதேச நடைமுறையின் கீழ், ஏலதாரர்கள், இணையதளத்தில் தங்கள் ஏலங்களைப் பதிவேற்ற வேண்டும். ஏலச் சமர்ப்பிப்பு காலக்கெடுவுக்குப் பின்னர் முப்பது நிமிடங்களுக்குள் ஏலங்கள் திறக்கப்படும்.
அத்துடன் ஏல விற்பனை இணைய மாநாடு
வசதி மூலம் இணைக்கப்படும்.
இதற்கிடையில், ரஷ்யா - உக்ரைன் போரின் காரணமாக, பிற நாடுகளிலிருந்து தேவையான
அளவு உரங்களை பெறுவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனிடம்
இருந்து யூரியாவை கொள்முதல் செய்ய இலங்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.