சனல் 4 காணொளி குறித்து பல இரகசியங்களை மறைக்கும் கோட்டாபய! ஜெனிவாவிலிருந்து தகவல்
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை பொய்யானது என ஊடகவியலாளர் ஸ்ரீ லால் பிரியந்த தெரிவித்துள்ளார்.
தற்போது ஜெனிவாவில் தங்கியுள்ள இவர், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி தொடர்பில் இணைய ஊடகம் ஒன்றில் கலந்துரையாடலில் கலந்து கொண்டு இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கை
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கியுள்ள தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே 2016 மற்றும் 2019 க்கு இடையில் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என கோட்டாபய ராஜபக்சவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உண்மைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் சி.ஐ.டியினால் நடத்தப்பட்ட விசாரணைக்கு வாய்மூல பதில் வழங்குவதற்காக, குறித்த காலப்பகுதியில், சுரேஷ் சலே இலங்கைக்கு அழைக்கப்பட்டதாகவும், கோட்டாபய மற்றும் சுரேஷ் சலே இதனை மறந்துவிட்டதாகவும், தன்னிடம் அவர்களின் கடவுச்சீட்டுக்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை
சனல் 4 காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பதிலை தயாரிப்பதற்கு அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலேயும் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடந்த காலம் முன்னெடுத்த ஷானி அபேசேகர உள்ளிட்ட புலனாய்வாளர்கள், 'சோனிக் சோனிக்' என்ற புனைப்பெயரில் தோன்றிய பொலிஸ் பரிசோதகர் செனரத் பண்டாரவிடம் வாக்குமூலம் பெற பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஷானி அபேசேகரவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து இது தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.