போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் நடந்திருக்காது!
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சூத்திரதாரி யாராக இருக்கும் என்பது தொடர்பான சந்தேகங்கள், ஊகங்கள், தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே எல்லோர் மனதிலும் அவரவர் தன்மைகளுக்கு ஏற்ப எழுந்துள்ளன.
இப்பின்புலத்தில் சனல் 4 தொலைக்காட்சி முழு விபரங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கின்றது.
பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்று பலர் மீது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்தன. ஜெனீவா மனித உரிமைச் சபை அறிக்கைகளிலும் குற்றச்சாட்டு விபரங்கள் உண்டு.
ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்தனை குற்றங்களையும் மூடி மறைத்து 2020 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவைக் களமிறக்கி அவரை வெற்றிபெற வைப்பதில் இலங்கைக் கத்தோலிக்கத் திருஅவையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முழுமையாக ஈடுபட்டார் என்பது பகிரங்கமான உண்மை.
தமிழர்களின் அரசியல் விடுதலை
இதனால் தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் இறுதிப் போரில் நடத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றம் தொடர்பான எந்த ஒரு அக்கறையும் மல்கம் ரஞ்சித்திடம் இருந்திருக்கவில்லை என்பது அப்போதே பட்டவர்த்தனமாகியது.
2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டபோது, கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிப்படையாகவே நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்த மல்கம் ரஞ்சித், தமிழர்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்பதைவிடவும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நீட்சியிலேயே முழுக் கனத்தையும் செலுத்தியிருந்தார் என்பதும் பகிரங்கம். இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அதன் சட்டங்களும் பல்லின சமூகங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதைக்கூட மல்கம் ரஞ்சித் ஏற்கத் தயாராக இல்லை.
இப்பின்னணியிலேதான் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கியதோடு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த விசாரணைகள் இடம்பெற்றுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மல்கம் ரஞ்சித் அப்போது உறுதியாக நம்பிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனால் இறுதிப் போரில் நடந்த மனிதப் படுகொலைகள், தமிழ் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எதிலும் மல்கம் ரஞ்சித் கவனம் செலுத்தியதாக இல்லை.
2012 இல் முதன் முறையாக இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, சர்வதேச விசாரணை தேவையில்லை என்று மல்கம் ரஞ்சித் நியாயப்படுத்தியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விசாரணை
இலங்கைக்கு உள்ளேயே விசாரணைகளை நடத்த முடியும் என்றும் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விசாரணைக்குக் கோட்டாபயவை நம்பியிருந்த மல்கம் ரஞ்சித், உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதமாகியதால் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தார்.
2022 இல் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் சென்றிருந்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குச் சர்வதேச விசாரணையைக் கோரிய மல்கம் ரஞ்சித், 2009 இறுதிப் போர் மற்றும் 1958 இல் இருந்து மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றிய விசாரணைகளுக்கு மாத்திரம் உள்ளக விசாரணை போதுமென்று பரிந்துரை செய்தமைதான் வேடிக்கை.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்காகச் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை |
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது பௌத்த சமயத்தை முதன்மை மதமாக ஏற்றுக்கொள்வதாகவும் மல்கம் ரஞ்சித் பகிரங்கமாக உறுதியளித்திருந்தார். இது மல்கம் ரஞ்சித்திடம் இருந்த சிங்களத் தேசிய உணர்வைப் பகிரங்கப்படுத்தியது.
சமயத் தலைவராக அதுவும் சர்வதேச கர்த்தினால் அந்தஸ்துடன் இருந்தாலும் பேராயர் மல்கம் ரஞ்சித்திடம் தனது இனத்துக்குரிய தேசியச் சிந்தனை இருக்கலாம். அது தவறல்ல. ஆனால் அந்தச் சிங்களத் தேசிய உணர்வு இலங்கைத்தீவில் இருக்கின்ற தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் விடுதலையை நிராகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்க முடியாது.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய உண்மை விபரங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்திய பின்னர் உடனடியாக மீண்டும் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்த மல்கம் ரஞ்சித், 2009 இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து காணாமல் ஆக்கப்பட்டுமுள்ளமை பற்றியும் எந்தக் கருத்தையும் கூறவில்லை.
ஈத்தமிழர்களின் நிரந்த அரசியல் தீர்வு
இப்பின்புலத்திலேதான் ஈத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்த அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் எல்லாமே தற்போது ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் ஜனநாயக உரிமை அல்லது மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரமாக மாறி வருவதை அவதானிக்க முடியும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் முப்பது வருட போரிலும் அதற்கு முன்னர் 1958 இல் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகள், வன்முறைகள் பற்றிப் பேசுவதைவிடவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிக் குரல் கொடுப்போரின் பின்னணி பற்றியே அதிகளவு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்காகச் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை. இந்த அசிங்க அரசியலின் தொடர்சிதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்.
அங்கிருந்துதான் சனல் 4 தனது ஆவணப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். குறிப்பாக ஜே.ஆர் ஜயவர்த்தனாவில் இருந்து ரணில் விக்கிரமசிங்க வரையும் தமிழர்களின் போராட்டத்தைச் சர்வதேச அரங்கில் பயங்கரவாதமாகத் திசை திருப்பி முறியடிக்க, தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்குச் சம்பளம் வழங்கி இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியிருந்தது.
இதற்கு அமெரிக்க - இந்திய அரசுகளும் அப்போது ஒத்துழைத்த உண்மைகளை சனல் 4 ஆதாரங்களுடன் வெளியிட விரும்பவில்லை என்பதையே தாக்குதல் பற்றிய ஆவணப் படம் சித்தரிக்கிறது.
சர்வதேச விசாரணை
ஆவணப் படத்தின் பின்னர், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த மறு கணமே பேராயர் மல்கம் ரஞ்சித்தும் அவ்வாறு கோரியுள்ளார் என்றால், சிங்கள அரசியல் தலைவர்களும் மல்கம் ரஞ்சித் போன்றோரும் 2009 நடந்த இறுதிப் போரையும் ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் எப்படிப் பார்க்கின்றனர் என்பது புரிகின்றது.
இலங்கை சிறிய அரசு. ஊழல் மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் நிறைந்த அரசு. அங்கு இன ஒடுக்கல் நடக்கிறது. இவை பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்தாலும், தமது புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் தெரியாதது போன்று அமெரிக்க - இந்திய மற்றும் சீன அரசுகள் இயங்குகின்றன.
வல்லரசுகளின் இந்த அணுகுமுறைதான் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த யோகம். ஆனால் வல்லரசுகளின் இந்தப் பிழையான அணுகுமுறைகள் பற்றி சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தவேயில்லை.
ஏனெனில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இங்கு பிரதானமாகிறது. இந்த இடத்திலேதான் மல்கம் ரஞ்சித்தின் செயற்பாட்டையும் நோக்க வேண்டியுள்ளது.
தமிழர்களின் அரசியல் நியாயத்தை முடக்க எண்பது வருடங்களாக வெ்வேறு வியூகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளை வெளிப்படுத்தக் கூடிய மூலங்கள் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள், அருட் தந்தையர்கள் பலருக்கும் நன்கு தெரியும். அவர்கள் சர்வதேச அரங்கில் பகிரங்கப்படுத்தியுமுள்ளனர்.
சனல் 4 தொலைக் காட்சிக்கும் இந்த உண்மை புரியும். முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் முள்ளிவாய்க்காலில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் வாக்குமூலம் வழங்கியபோது பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி இழுத்து மூடப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குச் சர்வதேச விசாரணையைக் கோரிய மல்கம் ரஞ்சித், 2009 இறுதிப் போர் மற்றும் 1958 இல் இருந்து மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றிய விசாரணைகளுக்கு மாத்திரம் உள்ளக விசாரணை போதுமென்று பரிந்துரை செய்தமைதான் வேடிக்கை |
இன அழிப்பு விசாரணை கோரிக்கை
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் இன அழிப்பு விசாரணைக் கோரிக்கை அல்லது ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாகப் போர்க்குற்ற விசாரணை நடத்துவது பற்றிய விவகாரங்கள் சூடுபிடித்தபோது மல்கம் ரஞ்சித் வாய் திறக்கவில்லை.
பேராயர் என்ற அந்தஸ்த்தில் இருந்து கொண்டும், வத்திக்கான் திருத்தந்தையின் கர்த்தினால்களில் ஒருவர் என்ற சர்வதேச அங்கீகாரத்தோடும், பௌத்த சமயத்தை மையப்படுத்தித் தன் சிங்கள இனம் சார்ந்து மாத்திரம் மல்கம் ரஞ்சித் நியாயம் கோரியிருக்கிறார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 269 போரில் அதிகமானோர் தமிழர்கள். ஆகவே பாதுகாப்பற்ற தமிழ்ச் சமூகம் மீதுதான் தாக்குதல் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் கூட மல்கம் ரஞ்சித் புரிந்து கொண்டவராக இல்லை. மாறாகத் தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டமை என்பது மாத்திரமே மல்கம் ரஞ்சித்தின் கவனமாக இருந்தது. இதனை அவர் வழங்கிய நேர்காணல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
1982 இல் அருட்தந்தை சிங்கராயர் கைது செய்யப்பட்டதில் இருந்து 2009 போர் இல்லாதொழிக்கப்படும் வரை ஒன்பது அருட் தந்தையர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சில அருட் தந்தையர்கள் காயமடைந்துள்ளனர். பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். வேறு சிலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடைந்துள்ளனர்.
வடக்குக் கிழக்கில் நூற்றுக்கும் அதிகமான தேவாலயங்கள் குண்டுத் தாக்குதலினால் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இராணுவ உயர் பாதுகாப்பு வலங்களுக்குள் சில தேவாலயங்கள் இன்மும் முடங்கியுள்ளன.
முப்பது வருடப் போரின் அவலங்கள் இழப்புகளுக்கு மத்தியில் வடக்குக் கிழக்குத் தமிழ் ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் பொறுப்புடன் செயற்பட்டனர். 2009 இன் பின்னரே வடக்குக் கிழக்கு ஆயர் மன்றம் உருவாக்கப்பட்டது. அது தமிழ் ஆயர் மன்றம் என்று வெளிப்படையாகக் கூறப்படுவதுமில்லை.
இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் கூட்டுப்பொறுப்பு
இலங்கை கத்தோலிக்கத் திருஅவையின் கூட்டுப் பொறுப்பு மற்றும் சமய ஒற்றுமை என்ற பண்பின் அடிப்படையில் வடக்குக் கிழக்கு ஆயர் மன்றம் இயங்குகின்றது.
சமகால அரசியல் விவகாரங்களில் சில தமிழ் அருட் தந்தையர்கள் பின்பற்றுகின்ற நிதானம், பொறுப்பு, பேராயர் மற்றும் திருத்தந்தையின் கர்த்தினால் என்ற முறையில் ரஞ்சித் மல்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அறுபது வருடங்களுக்கு முன்பு அமரர் சிறிமாவின் ஆட்சிக்கு எதிராகக் கறுப்புக்கொடிப் போராட்டத்தை நடத்தியவர் கொழும்பின் முதலாவது சிங்களப் பேராயர் தோமஸ் கூரே. 1965 இல் முதலாவது கர்த்தினாலாகவும் இவர் தெரிவாகியிருந்தார். இவருக்குப் பின்னர் இலங்கையில் கர்தினாலாக எவரும் நியமிக்கப்படவில்லை.
2009 யுத்தம் முடிந்ததும் 2010 இல் பேராயர் மல்கம் ரஞ்சித் இரண்டாவது கர்தினாலாகத் திருத் தந்தையினால் நியமிக்கப்பட்டார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கமே முதலில் செயற்பட்டது.
1960 ஜூலை மாதம் பதவிக்கு வந்தத அரசாங்கம் நன்கொடை பெறும் பாடசாலைகளை சுவீகரித்தபோது, கத்தோலிக்க பாடசாலைகளும் அரச உடமையாக்கப்பட்டன.
சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் புதிய தகவல்கள்: பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது அம்பலம் - ஹக்கீம் தகவல்
ஆயர் இராயப்பு ஜோசப் முள்ளிவாய்க்காலில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் வாக்குமூலம் வழங்கியபோது பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி இழுத்து மூடப்பட்டிருந்தது |
இன அழிப்பு விசாரணை
இதனை எதிர்த்து இலங்கைத்தீவு முழுவதும் தமிழ் - சிங்கள கத்தோலிக்க மக்கள் ஒன்றுபட்டுப் போராடினர். தோமல் கூரே இதற்குப் பிரதான காரணமாக இருந்தவர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உருவெடுத்து 2018 பெப்ரவரியில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவாக மாற்றம் பெற்ற ராஜபக்ச குடும்பத்திற்குக் குடைபிடிக்கும் அரசியலையே மல்கம் ரஞ்சித் முன்னெடுத்திருந்தார்.
ஆகவே ராஜபக்ச குடும்பத்தை ஆதரித்தமைக்காக சனல் 4 ஆவணப் படத்தின் பின்னர் பேராயர் பாவ மன்னிப்புக் கேட்டிருக்கலாம். ஆனாலும் கத்தோலிக்கர்கள் அல்லாத பௌத்த சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்தமைபோன்று, தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கான பேராயராகக்கூட மல்கம் ரஞ்சித் செயற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.
தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பு விசாரணை அல்லது குறைந்த பட்சம் ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணைக்கு மல்கம் ரஞ்சித், ஆயர் இராயப்பு ஜோசப்புடன் இணைந்து அப்போது கடும் அழுத்தம் கொடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடந்திருக்காது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உருவெடுத்து 2018 பெப்ரவரியில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவாக மாற்றம் பெற்ற ராஜபக்ச குடும்பத்திற்குக் குடைபிடிக்கும் அரசியலையே மல்கம் ரஞ்சித் முன்னெடுத்திருந்தார் |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Dhayani அவரால் எழுதப்பட்டு, 11 September, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.