இலங்கை பெரும் ஆபத்தில்..! அநுர அரசிடம் சஜித் அவசர வேண்டுகோள்
இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு முன்னரே உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட தொடர்ச்சித் திட்டம் ஒன்றுக்கான பேச்சுகளை ஆரம்பிக்குமாறு அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு
மேலும் தெரிவிக்கையில், "தற்போது செயற்பாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் 2027 மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றது.
அதன் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அரசிடம் எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லை.

எமது தற்போதைய திட்டம் முடிவடையும் போது, சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் இலக்கு 14.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆனால், தற்போது இலங்கையிடம் 7 பில்லியன் டொலர் மட்டுமே மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பில் உள்ளது.
அதாவது இலக்கில் 50 வீதம் மட்டுமே காணப்படுகின்றது. இந்த 14.2 பில்லியன் டொலர் இலக்கை நாம் அடைவதற்கான வாய்ப்பு வெறும் 0.01 வீதம் மட்டுமே உள்ளது.
அந்த இலக்கை எட்ட வேண்டுமாயின், எதிர்வரும் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 600 மில்லியன் டொலர் வீதம் கையிருப்பைச் சேகரிக்க வேண்டும். ஆனால் தற்சமயம் மாதத்துக்கு 60 மில்லியன் டொலர் மட்டுமே கிடைத்து வருகின்றது.
நாட்டின் உண்மையான நிலைமை
உலகச் சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலரைத் தாண்டியுள்ளது. இதனால் எரிபொருளை இறக்குமதி செய்ய எமது கையிருப்பிலிருந்து பெருமளவிலான நிதியைப் பயன்படுத்த நேரிடுவதால் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி ஆவரணம் இரண்டரை மாதங்களுக்கும் குறைவான நிலைக்குச் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எமக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 8.1 பில்லியன் டொலர் வெளிநாட்டு அனுப்பீடுகளில் 60 வீத வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளது. அங்கு ஏற்படும் வேலையில்லாப் போக்கினால் இந்த வருமானம் பாதிக்கப்படும். மறுபுறம் எமது சுற்றுலா வருமானமும் 17 வீதத்தால் குறைந்துள்ளது.
இவை தவிர, என்.டி.பி. வங்கியில் நிகழ்ந்த 13.2 பில்லியன் ரூபா மோசடி, கடன் செலுத்தச் சென்றபோது 25 இலட்சம் டொலர் காணாமல்போனமை, அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டமை போன்ற உள்நாட்டு நிதி மோசடிகளால் சர்வதேச தர மதிப்பீடுகளில் எமது நாடு மேலும் கீழ் மட்டத்தை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் இந்த உண்மையான நிலைமையை மக்களிடம் அரசு மறைக்காமல் கூற வேண்டும். இந்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை மருந்துக்காகவும், உரத்துக்காகவும், எரிபொருளுக்காகவும் வரிசைகளில் நிற்பதை எதிர்க்கட்சி ஒருபோதும் விரும்பாது.
எனவே, கர்வத்தைக் கைவிட்டு, வலுவான நிலையில் இருந்து புதிய இணக்கப்பாட்டுக்கு அரசு உடனடியாகச் செல்ல வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.