இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விக்கான காரணம் என்ன...!
இலங்கை கிரிக்கெட் அணியானது சமீப காலமாக மிக மோசமான ஒரு விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
ஒரு காலத்தில் கிரிக்கெட் வரலாற்றில் மற்றைய உலக நாடுகள் படைக்க முடியாத அளவு உச்சகட்ட சாதனைகளை படைத்த இலங்கை தற்போது அதற்கு தலைகீழாக மிக மோசமான சாதனைகளை நிலைநாட்டி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் கிரிக்கெட் சபையில் இருக்கும் அரசியல் தலையீடு என தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவுடன் நடைபெற்ற ஆசியகோப்பை இறுதி போட்டியில் இலங்கை படுதோல்வி அடைந்திருந்தது.
இந்த தோல்வி குறித்து பல தரப்புக்களிடமிருந்து சர்ச்சைகளும் எதிர்ப்புக்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் கடந்த 02.11.2023 ஆம் திகதி உலகக்கோப்பை தொடரின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள்போட்டியில் அதேபோல் மற்றுமொரு படுதோல்வியை இலங்கை சந்தித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வில் 90 சதவீதம் அரசியல் தலையீடு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர்களும் தெரிவித்திருந்தனர்.
வீரர்களுக்கு தேச பற்று இல்லை
குறிப்பாக விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுப்பதிலிருந்து எந்த வீரர்கள் நீக்கப்படவேண்டும் என்பதிலிருந்து அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக முத்தையா முரளிதரன் ஒரு பேட்டியில் கூறியிருந்ததாவது, நான் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு கூட வெற்றி பெறுவேன் ஆனால் கிரிக்கெட் சபையில் என்னால் வெற்றிபெற முடியாது என தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் கிரிக்கெட் சபையில் எந்தளவு அரசியல் தலையீடு இருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கையை பொருத்தவரையில் தேசிய அணிக்கான வீரர்கள் முழு இலங்கையில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
மாறாக குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதேபோல் அரசியல் தலையீடு மட்டுமன்றி தற்போது விளையாடும் வீரர்களுக்கும் ஒரு தேச பற்று இல்லை என்பதும் ரசிகர்கள் மத்தியில் இருந்து எழுகின்ற குற்றச்சாட்டாக அமைகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு மற்றும் இனவேறுபாடு ஆகிய இரண்டும் ஒழியுமாயின் பழைய இலங்கை கிரிக்கெட் மீண்டும் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.