உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை
இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடுவதற்கு இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளுக்கு, பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை பெற விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அறிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட்டு அவர்களின் உதவியை பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டால், தூதரக மட்டத்தில் அதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று பொது பாதுகாப்பு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்
2019 ஏப்ரல் 21 அன்று, மூன்று தேவாலயங்கள் (கடுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம்) மற்றும் கொழும்பில் மூன்று சொகுசு ஹோட்டல்கள் (சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் ஷங்ரி-லா) ஆகியன தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுவெடிப்புகளுக்கு இலக்காகியுள்ளன.
அத்துடன் அன்றைய தினம், தெமட்டகொடையில் உள்ள வீடு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் இடம் ஆகியவற்றில் மேலும் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 267 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலை குண்டுதாரிகளும் ஷங்ரிலா
ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரியான மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் அல்லது சஹ்ரான்
ஹாஷிம் என்பவரால் நிறுவப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் தொடர்புடையவர்கள்
என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.