கேள்விக்குறியாகும் எமது சமூகத்தின் இருப்பு! வியாழேந்திரன் விசனம் (photos)
கிழக்கு மாகாணத்தில் இருப்பு என்பது நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் கேள்விக்குறியாகவுள்ள சமூகம் இருக்கிறது என்றால் அது தமிழர் சமூகம். இதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்று வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் 2023 ஆம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இன இருப்பை கேள்விக்குள்ளாக்கும் அரசியல்வாதிகள்
கழகத் தலைவர் வே.லக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
இன, நில, வள, பொருளாதார மற்றும் கல்வி ரீதியான சகல துறைகளிலும் எமது சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகவுள்ளது.
எமது சமூகத்தின் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்குவதிலேயே மாற்று சமூகத்தின் அரசியல்வாதிகள் ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் மாற்று சமூக அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக கைப்பொம்மைகளாக எடுபிடிகளாக செயற்படுபவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகளாகும்.
தமிழ் தேசியம் என்ற போர்வையில் போலித் தேசியம் பேசுகின்ற இவர்கள் இன இருப்பை கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றதே யதார்த்தமான உண்மை என குறிப்பிட்டார்.




