இலங்கையின் ஆடை தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் (Photos)
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தியில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தியே இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் ஒன்றியம் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த ஆடைத் துறையில் உள்ள பல தொழிற்சாலைகள் தமது தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாடுகளில் தமது கைத்தொழில்களை ஸ்தாபித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையிலான குறித்த குழு முன்னிலையில் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூலப்பொருளுக்கான வரிகள் மற்றும் மின்சாரக் கட்டணம் காரணமாக செலவுகள் அதிகரித்தல் காரணமாக சர்வதேச சந்தையில் அவர்களின் போட்டித்தன்மை வெகுவாகக் குறைந்துள்ளதுடன், புதிய கட்டளைகளை பெறுவதும் மிகக் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தொழில் சுமார் மூன்றரை இலட்சம் நேரடி வேலை வாய்ப்புகளையும், சுமார் மூன்று இலட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளையும் நாட்டுக்கு வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும் பல பில்லியன் பெறுமதியான பெறுமதி சேர் (VAT) வரியை திருப்பி செலுத்தாமையால் தாம் எதிர்கொண்டுள்ள சிரமங்கள் குறித்தும் ஆடை உற்பத்தியாளர்கள் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
அந்நியச் செலாவணியை ரூபாவாக மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பிராந்தியத்தில் தற்போதுள்ள சட்டங்கள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |