வெடியரசன் கோட்டை பற்றி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சிறிதரன் எம்.பி
ஈழத்தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் காலத்தில் அமைக்கப்பட்ட "வெடியரசன் கோட்டையை" பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கு தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் நடைபெறும் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி (2023.03.16) ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'கி.மு.200 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், தொல்புரம், பூநகரி, மன்னார் போன்ற பகுதிகளை ஆட்சிசெய்த ஈழத்தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் காலத்தில் அமைக்கப்பட்டதும், நெடுந்தீவு மண்ணின் கோட்டைக்காடு என அழைக்கப்படும் நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் (J/01) இன்றும் தமிழர் தம் பண்பாட்டு, மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வருவதுமான விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தினால் மிகத்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புகளை தடுத்துநிறுத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஆக்கிரமிப்பு நடவடிக்கை
போருக்குப் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுள்ள தமிழ்த் தேசிய இனம் மீதான மொழி, நில, பண்பாட்டு, அடையாள ஆக்கிரமிப்புக்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வீரியமாக மேற்கொள்ளப்படுவதென்பது தமிழ்பேசும் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையிலான இன நல்லிணக்கத்தை அடியோடு சிதைக்கும் நடவடிக்கையாகவே அமையும் என்பதை தாங்களும் உணருவீர்கள் என நம்புகிறேன்.
ஏற்கனவே நீண்டதோர் போரின் நேரடி விளைவுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டெழ முடியாது தவிக்கும் எமது மக்களது இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் அடியோடு அழிக்கப்பட்டு அல்லது அவ் அடையாளங்களின் முக்கியத்துவமும், தொன்மையும் வலிந்து மறைக்கப்பட்டு அத்தகைய தொல்லிடங்களில் சிங்கள பௌத்த அடையாளங்களான விகாரைகளையும், புத்தர் சிலைகளையும், துறவிமடங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிக முனைப்போடு செயலுருப்பெற்றுள்ளன.
வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று என நீளும் இவ் ஆக்கிரமிப்புப் பட்டியல் தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை தனது ஆக்கிரமிப்பின் கால்களை ஆழப் பதித்துள்ளமை, இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களின் இயல்புவாழ்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
வெடியரசன் கோட்டை 'துறவிமடம்'
பௌத்தம் என்பது ஓர் மத அடையாளமே அன்றி சிங்கள இனத்துக்கான அடையாளம் அல்ல என்பதை அடியோடு மறுத்து தமிழினத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலையை நிகழ்த்துவதென்பது, இந்த நாட்டின் ஆட்சியாளரான தங்களின் தாராளவாதம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் கீழ் விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை 'துறவிமடம்' என்னும் பெயரிலான தொல்லியல் ஒதுக்கிடமாக வெளிப்படுத்தி (2020.11.26) ஆம் திகதி 2203/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டமை பற்றி துறைசார் இராஜாங்க அமைச்சர் கௌரவ.விதுர விக்ரமநாயக்க அவர்களுக்கு (2020.12.18) ஆம் திகதி நான் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவின் மாவிலி இறங்குதுறையிலும், கோட்டைப் பகுதியிலும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலான விளம்பரப் பலகைகளில் தற்போதுள்ள கோட்டையின் பாகங்கள் பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்கள் எனக் குறித்துரைக்கப்பட்டுள்ளதன் மூலம் மிகப்பாரதூரமான வரலாற்றுத் திரிபுக்கான முன்னகர்வுகள் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நாட்டின் சுதேசிய இனமான தமிழ்த்தேசிய இனத்தின் தொன்மைமிகு அடையாளங்களை
சிதைத்தழித்து, தொல்பொருள் என்ற போர்வையில் அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களாக
மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், நெடுந்தீவு
விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை தொடர்ந்தும் தமிழர்களின் பாரம்பரிய
அடையாளமாக பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற
நம்பிக்கையோடு, மக்களின் கோரிக்கையாக இதனை தங்களுக்கு முன்னளிப்புச்
செய்கிறேன்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.