அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரன் அரசுக்கு முண்டு கொடுப்பது ஏன்..! சபையில் தயாசிறி கேள்வி
அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் மக்களின் ஆணையை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றி வருகின்றார் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
சிறீதரனின் செயற்பாடுகள் பாரிய சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், சிறீதரன் உடனடியாக அரசமைப்புக் கவுன்ஸிலில் இருந்து பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இராணுவ மயமாக்கலுக்கு ஆதரவு அரசமைப்புக் கவுன்ஸிலில் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய சிறீதரன், அதற்கு மாறாக அரசாங்கத்தின் விருப்பத்துக்கு இணங்கச் செயற்படுகின்றார் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பகிரங்க குற்றச்சாட்டு
குறிப்பாக, சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு சிறீதரன் ஆதரவாக வாக்களித்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும் சிறீதரன், நாடாளுமன்றத்துக்குள் இராணுவ மயமாக்கலுக்குத் துணை போகின்றமை அந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1.7 பில்லியன் டொலர் திட்டமும்'சாரங்கன்' சர்ச்சையும் இந்த அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் பாரிய நிதி ஊழல் மறைந்திருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர சந்தேகம் வெளியிட்டார்.
சிறீதரனின் நெருங்கிய சகா எனக் கருதப்படும் 'சாரங்கன்' என்பவரின் ஊடாகப் பூநகரி சூரிய சக்தி மின் திட்டத்தில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 1,727 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் இந்த 700 மெகாவாட் திட்டத்துக்காகவே சிறீதரன் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தவகையில் சிறீதரனின் வங்கிக் கணக்குக்கு 40 மில்லியன் ரூபாவும், சாரங்கனின் வங்கிக் கணக்குக்கு 30 மில்லியன் ரூபாவும் வைப்பிடப்பட்டுள்ளன எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
8 முறை அரசுக்கு ஆதரவு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனம் உட்பட சுமார் 8 முக்கிய சந்தர்ப்பங்களில் சிறீதரன் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என்ற விவரங்களை தயாசிறி ஜயசேகர வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
"எதிரணியில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் 'காண்ட்ராக்ட்' எடுப்பவர்களை அரசமைப்புக் கவுன்ஸிலில் அனுமதிக்க முடியாது" எனவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
பதவி விலக வேண்டும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தமக்கு எதிராக விசாரணை நடத்துகையில், அதை மறைத்து அரசமைப்புக் கவுன்ஸிலில் அவர் உறுப்பினராகச் செயற்படுகின்றமை முறையற்றது என்றார் தயாசிறி.
சிறீதரன் இனியும் அந்தப் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்ட தயாசிறி ஜயசேகர, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட கட்சி அவரைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினார்.