திருக்கோணேஸ்வர ஆலயத்தை பாதுகாக்க மூன்று முக்கிய தீர்மானங்கள்!: சைவ சமய அமைப்புக்களால் நிறைவேற்றம்
ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று (11) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
யாழ். - நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலககத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இச்சந்திப்பில் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தாரத்தன், சி.சிறிதரன் போன்றோரும் கலந்துகொண்டனர்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
இங்கு கருத்து தெரிவித்தவர்கள் திருக்கோணேஸ்வரம் சைவத் தமிழர்களின் சொத்து
என்றும் இதைப் பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகள் உட்பட சைவ அமைப்புக்கள் அனைவரும்
ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆலயம் ஆக்கிரமிக்கப்படுவதை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
முக்கிய தீர்மானங்கள்
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் பாதுகாக்கும் வகையில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்போது,
01) வடக்கு - கிழக்கு உட்பட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக திருகோணமலை மாவட்டத்தின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் இருப்பைப் பாதுகாத்து அதன் நெருக்கடிகளைக் களைய ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி ஆவன செய்ய வேண்டும்.
02) திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இந்தியந் தூதரகத்தின் உதவியுடன் இராஜகோபுரம் அமைத்து அதனைக் காத்தல் உள்ளிட்ட விடயங்களை உடனடியாகத் தூதரகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லல்.
03) திருக்கோணேஸ்வரத்துக்கான யாத்திரையை ஊக்குவித்தல். ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் கலாநிதி ஆறு. திருமுருகன் உரையாற்றும்போது,
"திருகோணமலைக் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு இடையூறான வகையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காகவே திருக்கோணேஸ்வரத்தைக் காக்கும் இந்த முயற்சி நல்லை ஆதீன குருமுதல்வர் தலைமையில் இடம்பெறுகின்றது.
திருகோணமலைக்கு என்ன பதில் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையின் கீழே அமர்ந்து குரல் எழுப்புவதைத் தவிர இன்று வேறு மார்க்கம் இல்லை. இதுவே திருக்கேதீஸ்வரத்திலும் இடம்பெற்றது.
அதன்போது அந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட வாய் திறக்கவில்லை. இது மதம் அன்றி இனம் சார்ந்த அழிவுக்கும் இட்டுச் செல்லப் போகின்றது. திருக்கோணேஸ்வரர் செய்தி மூலம் திருகோணமலையை அபகரிக்க எடுத்த சதிகள் அம்பலமாகியுள்ளன.
நாம் எல்லாவற்றையும் ஜெனிவாவுக்குகே கொண்டு போகின்றோம் என்பதும் யதார்த்தத்துக்குப் பொருத்தம் அற்றது. அதேநேரம் தொல்லியல் திணைக்களத்தின் அநியாயமும் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது"என்றார்.
மேலதிக செய்தி: எரிமலை