கேள்விக்குறியாக மாறிய இலங்கையின் இணையப் பாதுகாப்பு யோசனை
உலகில் உள்ள இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதன் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆசியா இன்டர்நெட் கோலியேசன் அமைப்பு, இலங்கை அரசாங்கத்தின் இணையப் பாதுகாப்பு யோசனை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த யோசனையில் விரிவான திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் அவசியம் என்றும் கோலியேசன் அமைப்பு கோரியுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிற்கு கோலியேசன் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஏஐசி ஜெஃப் பெய்ன் எழுத்துப்பூர்வமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம்
இலங்கை அரசாங்கத்தின் யோசனையுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் நுணுக்கங்களை நிவர்த்தி செய்ய இன்னும் விரிவான மற்றும் அர்த்தமுள்ள ஆலோசனை அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட சட்டம், அதன் தற்போதைய வடிவத்தில், குறிப்பிடத்தக்க சவால்களை கொண்டுள்ளது.
இது விரிவான முறையில் கவனிக்கப்படாவிட்டால், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சியை குறித்த யோசனை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஆசிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி யோசனையின் உட்பிரிவுகளில் அடங்கியுள்ள ஒழுங்குமுறை சுதந்திரம் மற்றும் வெளிநாட்டிற்குப் புறம்பான பயன்பாடு முதல் இடைத்தரகர்களின் பரந்த வரையறை, தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை வரையறுக்கும் தெளிவற்ற சொற்கள், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிறந்த நடைமுறை தரநிலைகளில் இருந்து விலகல் போன்ற விடயங்களில் திருத்தங்கள் அவசியம் என்று ஆசிய அமைப்பு கோரியுள்ளது.
பயனுள்ள இணைய பாதுகாப்பு
இந்நிலையில் இலங்கையின் இணைய பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்ப்பதன் முக்கியத்துவத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள ஆசிய அமைப்பு, செயல்படக்கூடிய மற்றும் பயனுள்ள இணையப்பாதுகாப்பு சட்டமூலத்தை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் தமது கோரிக்கைகளை முழுமையாக பரிசீலிக்கவேண்டும் எனவும் இணையப்பாதுகாப்பு யோசனை குறித்து மேலும் ஆலோசனைகள் மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபட தாம் தயாராக இருப்பதாகவும் ஆசியா இன்டர்நெட் கோலியேசன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |