கனடாவை உலுக்கிய கொடூர படுகொலைகள்: கொலையாளி தொடர்பில் வெளியான புதிய தகவல்
கனடா - ஒட்டாவா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை கொலையுண்ட குடும்பத்தினர் அண்மையில் கொண்டாடியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளைஞர்
இதற்கமைய கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளைஞர் விரும்பிய அனைத்தையும் இந்த குடும்பத்தினர் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விஹாரையின் பௌத்த பிக்கு இந்த குடும்பம் பற்றிய பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த குடும்பம் மிகவும் கருணையானவர்கள் எனவும், மத வழிபாடுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் எனவும் இந்தக் குடும்பம் கொலையுண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பந்தே சுனேத தேரர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக பெர்பியன் டி சொய்சாவின் 19ஆம் பிறந்த நாளை இந்த குடும்பத்தினர் கூடி கொண்டாடி மகிழ்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தந்தையான தனுஷ்க விக்ரமரட்னவின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும், முகத்திலும் முதுகிலும், நெஞ்சுப் பகுதியிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பல்வேறு கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த குடும்பத்தினர் கனடாவிற்கு வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவிட் தொற்றின் பின்னர் சர்வதேச மாணவர்கள் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கி வரும் உளவியல் அழுத்தங்கள் குறித்து கவனம் செலுத்தி தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் சுனேத தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |