போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சிக்கிக்கொண்ட இலங்கையர்கள் - பல லட்சம் ரூபாய் இழப்பு
Sports Chain’s எனப்படும் போலி கிரிப்டோ கரன்சி முதலீட்டுத் திட்டத்தில் பெருமளவிலான இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sports Chain’s இணையதளம் மற்றும் கையடக்க தொலைபேசி மென்பொருளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் நூறாயிரக்கணக்கான டொலர்களை இழந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் ஆங்கிலத்தில் பல இலக்கணப் பிழைகளைக் கொண்ட பிரமிட் திட்டம் என்று அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு பழைய முதலீட்டாளர்களுக்கு பணம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் Sports Chain’s இணையதளத்தை கிரிப்டோ முதலீட்டு முறை என்று அழைத்தாலும், Sports Chain’s என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கிரிப்டோகரன்சி அல்லது சொத்து எதுவும் இல்லை என்று கூறப்படுகின்றது.
இந்த மோசடியில் 30-40 வயதுக்குட்பட்ட இலங்கையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெருமளவானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர் தங்களுடைய சொத்துக்களை குடும்ப உறுப்பினர்களிடம் கூறாமல் விற்று பணத்தை அதில் முதலீடு செய்துள்ளனர்.
ஒருவர் தனது சொத்தை விற்று 22 லட்சம் ரூபாயை Sports Chain இல் முதலீடு செய்து வெறும் 2 லட்சம் ரூபாயை திரும்பப் பெற்றதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.