எல் நினோ காலநிலையில் வாழ்வாதாரங்களை இழந்த இலங்கை மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
தற்போது நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வறட்சி காரணமாக தோட்டச் செய்கைகளுக்குப் போதுமான நீர் கிடைக்காத நிலையில், நிலங்கள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால், சிலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தென்னைப் பயிர்ச்செய்கை, தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக காய்ந்து போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையை அரசாங்க அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கினால் தங்களது வாழ்வாதாரங்களைத் தொடர முடியும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
