மண்டேலாவுடன் தன்னை ஒப்பிட்ட நாமல் ராஜபக்ச - கொந்தளிப்புடன் பதிலடிக் கொடுத்த நஜித் இந்திக்க
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, தன்னை முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுகை தவறு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாமல் ராஜபக்ச சிறையில் இருப்பதும், அந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா சிறையில் இருந்ததும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. “சிலரைச் சிரமங்கள் உடைத்துவிடுகின்றன. ஆனால், மற்றவர்களை அவை மேலும் வலிமையாக்குகின்றன” என நெல்சன் மண்டேலா கூறியதை நாமல் ராஜபக்ச மேற்கோள் காட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்காக நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். எனினும், நாமல் ராஜபக்ச தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது.
அடக்குமுறை மற்றும் இனவெறி கொண்ட ஓர் அமைப்புக்கு எதிராகப் போராடியதற்காக மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாகி, இனவெறி ஆட்சியிலிருந்து நாடு மாற்றமடைவதற்கு தலைமை தாங்கினார்.
செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியல்
அதேவேளை, ராஜபக்சர்களின் குடும்ப ஆட்சிக் காலத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே அவர்கள் செயற்பட்டனர். இவ்வாறான நிலையில், நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த அந்த தென்னாப்பிரிக்கத் தலைவருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில், செப்டெம்பர் 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவான CIABOC ஆல் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். அவர் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பான நிதியில், தொழிலதிபர் ஒருவரின் ஊடாக நாமல் ராஜபக்ச 100 மில்லியன் ரூபாயைப் பெற்றதாக CIABOC குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.