அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு (கோஹன்) 6 வயதும், சிறுமிக்கு 4 (லில்லி) வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலக்கவும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இம்முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையில் குணத்திலக்கவின் திருமண வாழ்க்கை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி படிப்புக்காக அவுஸ்திரேலியா சென்ற குணத்திலக Curtin பல்கலைக்கழகத்தில் படித்த போது உடன் படித்த அந்நாட்டு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார். பின்னர் கடந்த 2016ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
குணத்திலகாவின் மனைவி மற்றும் மாமியார் இருவருமே சட்ட துறை தொடர்பான பணியில் இருந்தனர். குணத்திலகவை தனது மகள் திருமணம் செய்வதற்கு அவரின் தாயார் ஆரம்பம் முதலேயே தயக்கம் காட்டி வந்தார் என கூறப்படுகிறது.இந்த சூழலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கடந்த 2020 - 2021 காலக்கட்டத்தில் குணத்திலகவுக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியும், மாமியாரும் சட்ட துறையில் இருந்ததால் அவர்களிடம் வாக்குவாதம் செய்து ஜெயிப்பது என்பது குணத்திலகவுக்கு கடினமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.இதை அவர் தனது நண்பர்களிடமும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து குணத்திலகவும் அவர் மனைவியும் பிரிவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் ஒருபக்கம் நடந்துள்ளன. மனரீதியான பிரச்சினை கொண்ட குணத்திலகவுடன் வாழ முடியாது என்ற காரணத்தையும் அவர் மனைவி கூறியதாக தெரிகிறது.இதற்கு அவரின் தாயாரும் பக்கபலமாக இருந்திருக்கின்றார்.
இதனை தொடர்ந்தே தனது பிள்ளைகளுடன் தனியாக குணத்திலக வசித்து வந்துள்ளார். இது குறித்து குணத்திலகவின் நண்பர்கள் கூறுகையில்,
குணத்திலக தனது மனைவியையும், பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். ஆனால் அவருடைய மனைவி தனது குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை. மாமியாரும் இதை தான் செய்தார். இந்த பிரச்சினைக்கு மத்தியில் இந்திகா குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவரது மனச்சோர்வு அதிகமாகிக்கொண்டே இருந்த சூழலில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
மேலும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட இரண்டு அழகான குழந்தைகளின் வாழ்க்கை இந்தப் பிரச்சினைக்கு மத்தியில் அழிந்துவிட்டது என வேதனை தெரிவித்துள்ளனர்.


 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        