ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: குற்றச்சாட்டுக்களை மறுக்கும் இலங்கை அதிகாரிகள்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த 6 சந்தேகநபர்களை போதைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களை நாசகார செயலுக்கு பயன்படுத்த முயன்றார்களா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை அபு என்ற நபரே வழிநடத்தியதாக கூறப்பட்டாலும், அவ்வாறானதொரு சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்திய பாதுகாப்புத்துறை
இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இந்திய பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தாக்குதல் நடத்த வந்ததாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இந்தியாவில் பிடிபட்ட இலங்கையர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேரை ஹலவத்தை, மாவனல்லை, கொழும்பு பிரதேசங்களில் வைத்து கைது செய்திருந்தனர்.
குறித்த 6 பேர் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்