ஐரோப்பிய நாடொன்றில் மண்ணுக்குள் புதையுண்ட இலங்கையர்கள் - 11 மணி போராட்டத்தின் பின் சடலமாக மீட்பு
ஐரோப்பிய நாடான ருமேனியா Găneasa பகுதியில் 2 இலங்கைத் தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்பு குழுவினர் 11 மணி நேரத்திற்கும் மேலான தீவிரத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த இலங்கைத் தொழிலாளி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 46 மற்றும் 48 வயதுடைய இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது, ஆறு மீட்டர் ஆழமுள்ள குழியின் மண் திட்டு சரிந்து விழுந்துள்ளது.
புதையுண்ட இலங்கையர்கள்
மண் சரிவு ஏற்பட்டதும் இருவரும் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில், பிற்பகல் 4.30 மணியளவில் அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்கப்பட்டது. மீட்புப் பணியின் போது மண் மீண்டும் சரிந்து மீட்புப் படையினருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்பட்டுள்ளது.

எனினும், குழியின் பக்கவாட்டுச் சுவர்களைப் பலப்படுத்திய பின்னரே தீயணைப்புப் படையினர் மிகக் கவனமாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
சுமார் 6 மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர், இரவு 10.30 மணியளவில் இடுப்பளவு மண்ணில் புதையுண்டிருந்த முதலாவது தொழிலாளி எவ்வித காயங்களுமின்றி சுயநினைவுடன் மீட்கப்பட்டார்.
அவர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் ஐந்து மணி நேரத் தேடுதலுக்கு பின்னர் அதிகாலை 3:30 மணியளவில் இரண்டாவது தொழிலாளியை மீட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
கொன்கிரீட் பலகை ஒன்று அவர் மீது விழுந்து நசுக்கியதோடு, அதன் மேல் மண்ணும் சரிந்து மூடியதாலேயே அவரால் உயிர் பிழைக்க முடியாமல் போயுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு சட்டமூலம்! உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு