சிங்கப்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் இன்று (20) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
தங்கொடுவ - மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், வீட்டு உரிமையாளரின் கடும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து பாய்ந்த காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண் கடந்த 10 வருடங்களாக சைப்ரஸ் மற்றும் துருக்கியில் வீட்டுப்பணிப்பெண் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி வீட்டு வேலைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
உறவினர்கள் வெளியிட்ட தகவல்
குறித்த பெண் வீட்டில் வேலை அதிகமாக இருப்பதாகவும், கொடுத்த உணவை உண்ண முடியவில்லை என்றும் தெரிவித்த நிலையில் வேலை வாய்ப்பு நிறுவனம் வேறு வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, அவரது உறவினர்கள் அவரை இலங்கைக்கு அழைத்து வர முயற்சித்த போதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் கோரிக்கை காரணமாக அது தாமதமாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 16 ஆம் திகதி காலை நதிகா தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்திய நிலையில் நீண்ட நேரமாக பேசாமல் இருந்துள்ளார். இது தொடர்பில் அவரது கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
இதன்போது அங்கு அவர் பணிபுரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்
உயரமான மாடியில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அவர் இறப்பதற்கு முன்னர் வீட்டில் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |