இஸ்ரேலுக்கு சென்று போதைக்கு அடிமையான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இஸ்ரேலுக்கு தொழிலுக்காக சென்ற போதைப்பொருள் பழக்கம் காரணமாக உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு நிலைத்தன்மை இழந்த இரண்டு இலங்கையர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அவர்கள் திரும்புவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் செய்துள்ளது.
தொழிலாளர்களில் ஒருவர், பணியகத்தில் பதிவுசெய்த பின்னர், இஸ்ரேலிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2024இல் செப்டெம்பர் மாதம் இஸ்ரேலுக்குச் சென்றார்.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அவர் தனது வேலைக்குச் செல்லவில்லை. பின்னர், அவருடன் பணிபுரிந்த இலங்கையர்களால் ஜெருசலேமில் இருந்து டெல் அவிவிற்குக் கொண்டு வரப்பட்டார்.
சிறைத்தண்டனை
இலங்கைத் தூதரகம் தலையிட்ட பிறகு, அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றொரு தொழிலாளி சுமார் ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் வசித்து வருகிறார்.
ஆனால், அவரும் நீண்டகால போதைப்பொருள் பழக்கம் காரணமாக வேலைக்குச் செல்லத் தவறியுள்ளார் என தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடும் இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் போதைப்பொருள் பயன்படுத்துவது கடுமையான உடல் மற்றும் உள பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அந்நாட்டின் சட்டங்களின் கீழ் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக போலியான சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்களைக் கண்காணிப்பதை வலுப்படுத்தப் போவதாகவும், அத்தகைய நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



