அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருக்க முயற்சித்த இலங்கையர் கைது
இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடிக்கு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அகதிகள் போர்வையில்
தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி சென்ற நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி - அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று (11.11.2023) காலை அந்நிய நபர்கள் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளார்.
சட்டவிரோதமாக ஊடுருவல்
இதனால் சந்தேகமடைந்த மரைன் பொலிஸார் மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல் துறையை சேர்ந்த ஜெயராசா என தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து அவரிடம் மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் பொலிஸார் ஜெயராசாவிடம் விசாரணை நடத்திய போது அவர் மீது இலங்கை சாவகச்சேரி மற்றும் ஊர்க்காவல் துறை காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் பல குற்ற பின்னணி வழக்குகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரை இலங்கை பொலிஸார் கைது செய்து சிறை தண்டனை பெற்று சிறையில் அடைத்து விடுவார்கள் என்பதால் இலங்கையிலிருந்து தப்பித்து இரண்டு இலட்ச ரூபாய் பணம் கொடுத்து படகு ஒன்றில் நேற்று (10) மாலை சுமார் 4 மணியளவில் இலங்கை மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்துள்ளதாக விசாரணையில் ஜெயராசா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கடல் வழியாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தது தெரிய வந்ததால் அவர் மீது மண்டபம் மரைன் பொலிஸ் நிலைய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி பின் அவரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கு பொலிஸார் அழைத்து சென்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையின் குற்ற பின்னணி உள்ள நபர் ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவி அகதிகள் போர்வையில் தமிழக அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதறகாக தனுஷ்கோடி வந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |