இலங்கையர்களை ஆட்கடத்தும் நடவடிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் : பின்னணியில் பிரதான நாடு
உக்ரேன் - ரஷ்ய போர் முனைகளுக்கு இலங்கை இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகளை அனுப்பும் ஆட் கடத்தலின் பின்னணியில் மேற்கத்திய நாடு ஒன்றின் தூதரக அதிகாரிகளும் இருப்பதாக விசாரணைகளில் தகவல் கிடைத்துள்ளது.
ரஷ்யப் படையில் இணைவதற்காக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூன்று பேர், இந்த நாட்டிலுள்ள மேற்கு நாடு ஒன்றின் தூதரக அதிகாரி ஒருவருக்கு தலா 300,000 ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய போர் முனைகளுக்கு செல்வதற்காக சுமார் முப்பது பேர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுற்றுலா விசா
இந்த பணியாளர்கள் இந்தியா மற்றும் டுபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு சுற்றுலா விசாவில் ரஷ்ய போர்முனைக்கு அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், இந்த நாட்டிலிருந்து சுற்றுலா விசா மூலம் ஏராளமான இராணுவ வீரர்கள் உக்ரைன் போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு
இலங்கைப் படைகளின் உறுப்பினர்களை ரஷ்ய போர் முனைக்கு அனுப்புவதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் எந்த உடன்பாடும் இல்லை என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் மற்றும் துருப்புக்கள் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு முப்படைகளின் தளபதிகளுக்கு, பாதுகாப்பு அமைச்சு அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.