தமிழர்களை பகடைக்காயாய் பயன்படுத்தி கடன் பெற்று அவர்களையே அடக்கும் அரசாங்கம்: தர்மலிங்கம் சுரேஸ்
உலகெங்கிலும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்கின்றோம் தமிழ் மக்களை நாங்கள் சம உரிமையோடு பார்க்கின்றோம் என்கின்ற பொய்களை கூறி கடன்களைப் பெற்று மாறாக ஒரு இனத்தை அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளிலே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தினைத்தை நினைவு கூர்ந்ததற்காக கொக்கட்டிச்சோலைப் பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட குறித்த வழக்கு தொடர்பான விசாரனை நேற்று (02) நடைபெற்றது.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 2023ம் ஆண்டு மாசி மாதம் 01ஆம்
திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகிழடித்தீவு இறால்பண்ணையில் 1987 ஆம் ஆண்டில் தஞ்சம்புகுந்த 150 இற்கு மேற்பட்ட பொதுமக்களை அரசபடைகள் கொன்று குவித்திருந்தார்கள்.
அம்மக்களை நினைவுகூருவதற்காக மகிழடித்தீவில் அமைந்துள்ள நினைவுத்துபியில் கடந்த மாசி மாதம் 2022 ஆண்டு அஞ்சலி செலுத்தியதற்காகவே கொக்கட்டிச்சோலை பொலிஸார் கடந்த 13.10.2022 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களை மையமாக கொண்டு கடன் வாங்கும் அரசாங்கம்
“எங்களுடைய இறந்த உறவுகளை நாங்கள் நினைவு கூறுவதை பொலிஸார் தடை செய்கின்றார்கள். நேற்று (நேற்றுமுன் தினம்) எமது உயிரிழந்த உறவுகளை யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்ல இடத்தில் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு ஏற்பாட்டு குழுவினர் சென்று சிரமதான பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த நேரம் இராணுவத்தினர் பௌத்த கொடிகளை கொண்டு வந்து துப்புரவு செய்யும் பணியினை தடுத்து நிறுத்தி அவர்களுடைய சின்னங்களை அந்த இடத்திலேயே கட்டி துப்பரவு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்.
உலகெங்கிலும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்கின்றோம் தமிழ் மக்களை நாங்கள் சம உரிமையோடு பார்க்கின்றோம் என்கின்ற பொய்களை கூறி கடன்களைப் பெற்று மாறாக ஒரு இனத்தை அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளிலே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
மகாவலி எனப்படுகின்ற ஒரு அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்வதாக உலகத்திற்கு கூறி அந்த திட்டத்திலேயே தமிழர்களுடைய நிலப் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பில் இருக்கின்ற மயிலந்தனை மாதவனை போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை செய்வதற்கான முழு முயற்சிகளையும் இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஐ.நா மனித உரிமை பேரவையினிலே பொய்களை கூறி இங்கு இருக்கின்ற தமிழர்களுக்கு நாங்கள் எல்லா விதத்திலும் அவர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் எனக்கூறி இங்கே தமிழ் மக்களின் நிலை அடக்குகின்ற செயற்பாடுகளிலே ஈடுபட்டு வருகின்றார்கள்.
பொறுப்புகூறல் விடயங்கள்
இதுவரையிலே இலங்கைச் சிறப்பாக ஐ.நா மனித உரிமை பேரவையிலே கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அத்தனையும் பொறுப்பு கூறல் விடயத்தை அவர்கள் தீர்மானங்கள் கட்டுப்படுத்துவது இல்லை.
இந்த தீர்மானங்கள் கட்டுப்படுத்துவதாக இருந்தால் தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படாது அவர்களுடைய வளங்கள் சுரண்டப்படாது ஆனால் இவ்வளவு தீர்மானங்களும் அதாவது 30/1, 46/1, 51/1 தீர்மானங்கள் பொறுப்புகூறல் விடயங்களை கட்டுப்படுத்துவதாக இல்லை இதனால் இந்த அரசாங்கம் தொடர்ந்து நமது மக்களை அடக்குகின்ற ஒடுக்குகின்ற செயற்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட தமிழ் மக்களுடைய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அவர்களுடைய சுய நிர்ணயங்கள் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தை உருவாக்குவதற்கான செயல்பாடுகளை சர்வதேச சமூகங்கள் இலங்கைக்கு நிதிகளை வழங்குகின்ற நிறுவனங்கள் அதிலே கரிசனை கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த தீவிலே தமிழ் மக்கள் வேகமாக அழிக்கக்கூடிய ஆபத்தான நிலை
காணப்படுகின்ற அதேவேளை இந்த இலங்கை தீவில் சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய
முயற்சியை முழுவதும் தோல்வி பாதைக்கு இட்டு செல்லும் என்பதனை கூறிக்
கொள்கின்றேன்.” என்றார்.