படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க முன்வருமாறு கோரிக்கை
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு. ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (19) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுட்டுப் படுகொலை
மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் கிழங்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் யுத்தம் உக்கிரமாக இருந்த வேளையில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தற்துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன். யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு நிமலராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகாளாகியும் இதுவரையில் படுகொலையாளிகளுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
மாறிமாறி ஆட்சிக்குவந்த அரசுகள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் பாராமுகமாகவேயிருந்துவந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசும் அதேபோக்கில் செயற்பட்டு வருவதாகவும் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.












