பிரான்ஸ் சுங்கச்சாவடியில் இலங்கை தமிழரொருவர் கைது! பொலிஸார் வெளியிட்டுள்ள காரணம்
பிரான்ஸின் தென்பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் மொன்தோபான் A20 சுங்கச்சாவடியில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸின் பொபினி பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய இலங்கையர் ஸ்பெயினில் இருந்து சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 500 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை பாரிஸிற்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டின் பெறுமதி 51000 யூரோ என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சந்தேகநபர் ஸ்பெயினில் இருந்து துலுஸ் சென்று அங்கிருந்து பாரிஸ் செல்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்ரெனிஸ், வாழும் நண்பர் ஒருவரால் 1000 யூரோ வழங்கப்பட்டதாகவும், அதற்கமைய, தான் இந்த சிகரெட்களை கடத்தி வந்ததாகவும், இதுவே முதல் முறை எனவும் கைதான இலங்கையர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அதேவேளை இலங்கையர் தமிழர் பிரான்ஸ் மொழி தெரியாதவர் என்பதனால் அவரது மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் இந்த விடயங்களை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தான் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் சாரதி எனவும், தனது குடும்பத்துடன் பாரிஸில் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்இந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.