பிரித்தானியர்களை குறிவைத்து இலங்கை இன்ஃப்ளூவென்சர் மேற்கொண்ட மோசடி
இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடக இன்ஃப்ளூவென்சர் ஒருவர், பிரித்தானியா பற்றிய தவறான தகவல்களைப் பதிவேற்றும் முகப்புத்தக பக்கங்களை நடத்தி 230,000 பவுண்டுகள் வரை சம்பாதித்ததாக தெரிய வந்துள்ளது.
குறித்த நபரின் முகப்புத்தக பக்கங்களில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகப்புத்தக பக்கங்களை நடத்தி வருகின்றனர்.
அதில் தொழிலாளர் கட்சியை இஸ்லாமிய மக்கள் கைப்பற்றி, நடத்தி வருவதாகவும், லண்டனில் ஆணைய குடியிருப்புகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் தகவல் பகிரப்படுகிறது.
புலம்பெயர் மக்கள்
முகப்புத்தக பக்கங்களை உருவாக்குவதும், அதில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது தொடர்பில் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றைக் குறித்த நபர் நடத்தி வருகிறார்.

பெரும்பாலும் வயதானவர்களை இலக்கு வைக்கவும், அவர்களே புலம்பெயர் மக்களை விரும்புவதில்லை என்றும் தமது மாணாக்கர்களுக்கு அவர் வலியுறுத்துகிறார்.
தமது முகப்புத்தக பக்கங்களில் தென்படும் விளம்பரங்கள் ஊடாக குறித்த நபரும், அவரது மாணவர்களும் பணம் சம்பாதிக்கின்றனர். மேலும் இவர்கள், 1.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட 128 முகப்புத்தக பக்கங்கள் மற்றும் குழுக்களை நடத்தி வருவதாக புலனாய்வு இதழியல் பணியகத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், முகப்புத்தக உள்ளிட்ட சமூக ஊடகத்தில் எவ்வாறு சம்பாதிப்பது தொடர்பில் தாம் ஒரு நிபுணர் என குறிப்பிடும் குறித்த நபர், உலகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அவரின் ஒரு முகப்புத்தக பக்கத்தில், லண்டன் மேயர் சர் சாதிக் கான் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் 40,000 கவுன்சில் வீடுகளைக் கட்டுவதாக உறுதியளித்துள்ளார் என பதிவு செய்திருந்தார்.
1000 பவுண்டுகள்
அதுமட்டுமின்றி, அந்த ஒரு முகப்புத்தக பக்கத்திலிருந்து மட்டும் மாதம் 1000 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிப்பதாகக் குறித்த நபர் தெரிவித்துள்ளதுடன், புலம்பெயர் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் உள்ள கருத்துக்களை அதிகமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமது மாணவர்களுக்கு அவர் காணொளி ஒன்றில் அறிவுறுத்துகிறார்.

மேலும், இலங்கையர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் பிரித்தானியாவில் குடியிருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை எனக் காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகுகிறார் என்ற பொய்த்தகவலை முதல் முறையாகக் குறித்த நபர் தமது முகப்புத்தக பக்கம் ஒன்றில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், புலனாய்வு இதழியல் பணியகம் அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட நிலையில், "இது தவறான புரிதல் என்றும், வன்முறையைப் பரப்புவதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், 128 பேஸ்புக் பக்கங்களைத் தாம் நிர்வகிக்கவில்லை" எனவும் பதிலளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |