ஜனாதிபதி தேர்தல்: ரணிலுக்கு மொட்டு கட்சி ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது, ரணில் அரசு நலன்புரி திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ள நிதியமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்
அஸ்வெசும திட்டத்தில் உள்ளடங்காத தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடுகள், முறைப்பாடுகள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்யும் வரை சமுர்த்தி பயனாளர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளைத் தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும்.
பொருளாதார ரீதியில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வரும் நாட்டு மக்களுக்கு எந்த வழியிலாவது அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒரு சில தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொருளாதாரப் பாதிப்புக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் பொறுப்புக் கூற வேண்டும்.
நெருக்கடியான சூழலில் நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பாராயின் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |