தமிழர்கள் பகுதியில் நடக்கும் இடம் கையகப்படுத்தலுக்கு சாணக்கியன் எதிர்ப்பு
ஜனாதிபதியை புகழ்ந்து தள்ளுவதற்கு பதிலாக, அவர் விடும் பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள மாணவர்களின் மேம்பாட்டிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட எமது பிரதேசங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தது. அந்த அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி அமோக வெற்றியைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் கிராம ரீதியான பிரதேச வாதத்தைத் தூண்டி விட்டதால் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், நாம் எமக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து ஒரு அணியாக நிற்க வேண்டும்.

நாங்கள் மக்களுக்கு உதவி செய்வது வெறும் அரசியலுக்காக அல்ல. மாறாக நாடாளுமன்ற தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து இந்த நாட்டில் பிரதான எதிர்க்கட்சியின் வேலையை நான் தான் செய்து கொண்டு வருகின்றேன்.
22 தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே அநுரகுமார திசாநாயக்காவைத் தோற்கடித்த மாவட்டமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு பார்த்தால் அநுரகுமார திசாநாயக்காவுக்கு உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான்.
அந்த வகையில், அரசாங்கம் விடும் பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. சிலர் ஆட்சிக்கு தற்போது தானே வந்துள்ளார்கள், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கூறுகிறார்கள்.
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து சுமாராக ஒரு வருடங்கள் மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் நாம் அவர்களுக்கு இன்னும் காலம் கொடுப்போம்.
தமிழர் பகுதிகள் கையகப்படுத்தல்
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கும் போது ஒரு சட்டம், மட்டக்களப்பில் பலவந்தமாக தொல்பொருள் திணைக்களம் பதாதை வைக்கப் போகும் போது ஒரு சட்டம் என ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது.
எல்லா இனங்களையும் சமமாகப் பார்க்கும் கட்சியாக இருந்தால், சட்டவிரோதமாக ஈடுபடும் தேரர்களைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.
ஒவ்வொரு தமிழரையும் வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய தேரரை மட்டக்களப்பு பொலிஸார் மூன்று வாரங்களாகத் தேடினார்கள். அதன் பின்னர் அவரே வந்து சரணடைந்தார். அவருக்கு பிணையும் வழங்கப்பட்டது.

மேலும், தவிசாளர்களின் அதிகாரம் என்ன என்பது தமிழரசுக் கட்சி தவிசாளர் பதவிகளைப் பெற்ற பின்னர் தான் அனைவருக்கும் புரிந்தது.
சட்டவிரோதமாக ஒரு பிக்கு, புத்தர் சிலையை வைத்து காணி பிடிக்கும் போது அது சட்டத்தை மீறிய விடயம். ஆனால் எமது மத வழிபாட்டு தலங்களை தொல்பொருள் என்ற பெயரில் எடுத்து மக்களின் வழிபாட்டு சுதந்திரத்தை தடுப்பது, தடைச் செய்வது, வழக்கு போடுவது ஆகியன தான் இந்த அரசாங்கத்தின் சமத்துவம்.
தென்னிலங்கை, வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதியை விரும்புகிறார்கள். அதற்காக நாங்களும் பேசாமல் இருந்து விட்டால் நமது பிரதேசங்களை கைவிட்டு விட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். சமத்துவம் என்ற போர்வையில் அவர்கள் இங்கு வந்து விடுவார்கள்.
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை
தற்போது ஒரு வருடம் கடந்து விட்டது. எமது பிரச்சனைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ள வேண்டும். மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழக்கு போடுவது உளவியல் ரீதியான அச்சுறுத்தல்.
இதனை பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காமல் நாம் அனைவரும் ஒரு அணியாக திரண்டு அதனை எதிர்க்க வேண்டும். மக்களுக்கான அரசியல் என்பது ஜனாதிபதி செய்கின்ற விடயங்கள் எல்லாவற்றையும் பாராட்டுவது மட்டுமல்ல மக்களுக்கு பிச்சனைகள் வரும்போது அதனையும் வெளிப்படுத்த வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்து விட்ட வேளையிலும், இதுவரையில் மின்சாரக் கட்டணம் 30 வீதத்தால் குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளை தடுக்கப்படுகின்றன என்றாலும், பிழைகள் வரும் பொழுது நான் கேள்வி கேட்பேன். நாங்கள் எட்டு மாவட்டங்களில் மாத்திரமே போட்டியிடுகின்றோம். எங்களுக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன.
இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் சம்மந்தமாக வரும் பொழுது அந்த ஆபத்தான நிலைக்கு எங்களால் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க முடியாது. அதே சமயம், முகநூல்களில் எழுதும், வீதிகளில் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் என் மக்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri