பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையும் வெளிப்படைத் தன்மையும் காணப்படாத நிலையில் இந்தியா மத்தியஸ்தம் வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டதாவது,
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் பின்தங்கிய மக்களின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் செயற்படும் 14 அடி மட்ட அமைப்புக்களை நாங்கள் கொண்டுள்ளோம்.
அந்த வகையில் வடக்கு கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறுபான்மை தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிகளை தொடர் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக அறிகிறோம்.
ஜனாதிபதிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் தமிழ அரசியல் கட்சிகளுக்கு இடையில் விதமான ஒருங்கிணைப்பும் வெளிப்படத் தன்மை இல்லை. ஜனாதிபதியுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளை ஒழுங்குபடுத்துவதோடு இந்திய மத்தியஸ்தம் வகக்க வேண்டும்.
நில அபகரிப்பு இராணுவ மயமாக்கல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு பாகுபாடுகள் தொடர்பில் விதமான தீர்வு வெட்டப்படாத நிலையில் குறித்த பேச்சு வார்த்தை இடம் பெறவுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசையான ஐக்கிய இலங்கைக்குள் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் ஒரு கூட்டாட்சி மாதிரியான அதிகார பகிர்வே.
ஆகவே தமிழ் மக்களுடைய நிரந்தர அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக் கொடுப்பதற்கு ஆவணை செய்வதோடு இந்தியாவின் வழிகாட்டலையும் ஆதரவையும் வேண்டி நிக்கிறோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார்.
இன்று (9) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இயக்கச்சி அம்மாச்சி உணவகம் முன்பாகவும் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது நாளையதினம் (10) நிறைவடையவுள்ளது.








