சூடுப்பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்: ரணிலின் முக்கிய நகர்வுகள் (Video)
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை பின்னர் அரசியல் நெருக்கடியாக மாறிய நிலையில் பலவேறு அரசியல் மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் நடந்த வண்ணமே உள்ளது.
மக்களின் போராட்டம் காரணமாக பதவி விலகிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்து வருகின்றனர்.
மறுப்புறம் அனைத்துக் கட்சி அரசாங்கம் யதார்த்தமானதாக இல்லாவிட்டால் புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வலியுறுத்தி வருகின்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
அதுமட்டுமின்றி "பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொண்ட நிலையில் அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையை மீட்டெடுக்க தமிழ் தலைவர்களும் இணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை எரியூட்டும் சதித்திட்டம்
இவை மாத்திரமின்றி கடும் அழுத்தங்களை பொருட்படுத்தாமல் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட சிலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் தினங்களில் நாடாளுமன்றத்தை எரியூட்டும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடந்த வாரம் இலங்கையின் நடைபெற்ற முக்கியமான அரசியல் மாற்றங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகிறது எமது அரசியல் பார்வை நிகழ்ச்சி