நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம்
இலங்கையில் நாள்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன. முதல்நாள் சீனாவோடும், மறுநாள் இந்தியாவோடும், அடுத்தநாள் ரஷ்யாவோடும், இடையிட்ட உணவு இடைவேளைகளில் இதர நாடுகள் - நிதி அமைப்புக்களுடனும் இணைந்து பயணிக்கவேண்டிய நிலைக்கு இந்நாடு தள்ளப்பட்டுள்ளது.
இத்தீவை கையாள நினைக்கும் அனைத்து நாடுகளுமே தம் நலனுக்கு இயைந்த வகையில் இங்கு மாற்றங்களைச் செய்கின்றன. இலங்கையை கையாளும் நாடுகளே இவ்வகையில் மாற்றங்களை நடத்திக்கொண்டிருக்கும்போது, இந்தாட்டு மக்கள் மட்டும் பழைய மொந்தைளுடனே அலையவேண்டுமா? எனவே அடிப்படை அரசியல் தெரிவு குறித்த விடயங்களில், யாப்புக்களில் மாற்றங்களைக் கொண்டுவர இலங்கை மக்கள் துணிதல் வேண்டும்.
ஜனநாயக ரீதியில் மக்களின் வாக்குகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இலங்கையினது அரசியல் அதிகாரத்திலும், அதன் பலம் - பலவீனத்திலும் உடனடியாக மாற்றங்களைக் கோருவதும் இவ்வேளையில் அவசியமானதாகும்.
உதாரணத்திற்கு இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறைமையை எடுத்துக்கொண்டு இப்பத்தியை மேற்கொண்டு செல்லலாம்.
ஜனாதிபதி முறைமை
1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ஜே. ஆர்.ஜெயவர்தன பதவியேற்றார். தற்போது ஜனநாயகத்தைப் அதிகளவு போதனைகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரே ஜே.ஆர். அவரேதான் இத்தீவில் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாதே தவிர மற்றைய அனைத்துக் கருமங்களையும் நிறைவேற்றக்கூடிய, சர்வ வல்லமையையும் பெறக்கூடிய ஜனாதிபதி முறைமையை வலிந்து திணித்தார்.
அந்த ஜனாதிபதி முறைமையினை வைத்துக்கொண்டு தனிநபர் ஒருவர் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகங்களின் விளைவே இன்றைய இத்தனை சீரழிவுகளுக்கும் காரணம்.
ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனம்
இதுவரை இலங்கை எட்டு ஜனாதிபதித் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆண்டு இடம்பெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கு செலவான தொகை மட்டும் 4.5 பில்லியன். இந்தத் தேர்தலில் 23 பேர் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்குள்ளிருந்தும் பொதுஜன பெரமுன என்கிற கட்சியின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவைத் தெரிவு செய்ய 4.5 பில்லியன் ரூபாய்களை இலங்கை மக்கள் தம் சொந்த நிதியிலிருந்து தெரிவுசெய்துள்ளனர்.
அதாவது மக்கள் இரத்தமாக, கண்ணீராக, வியர்வையாக உழைத்து அரசுக்கு கட்டிய வரிப்பணத்திலிருந்தே இந்தத் தேர்தல்களுக்கான பணமும் பெறப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் கணக்கு மதிப்பீடானது இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்தலுக்கான செலவு மட்டுமே.
எனவே அதுவரை நடந்தேறி முடிந்திருந்த ஏழு ஜனாதிபதி தேர்தல்களுக்குமான செலவைப் பார்த்தால் அந்தப் பணத்தை வைத்து இலங்கையைப் போல புதியதொரு தீவையே உருவாக்கியிருக்க முடியும். இத்தீவின் மக்களது வாழ்க்கைச் செலவைப் போல ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனமும் எவ்வித வருமான அதிகரிப்புமின்றி அதிகரித்திருக்கிறதே தவிர ஒருபோதும் குறையவில்லை. குறைய வாய்ப்புமில்லை.
வெறும் 2.1 பில்லியன் மக்கள் தொகையினைக்கொண்ட மக்களை ஆள்வதற்கு 23 பேர் பேட்டியிட்டால் எங்ஙனம் செலவு குறைப்பு இடம்பெறும் என்ற கேள்வியும் நியாயமானது. இதனைவிட தேர்தலில் போட்டியிட்டு வெல்வதற்குக் கட்சிகள் செலவிடும் பரப்புரைக்கான பணம், மக்களது நேரம், உழைப்பு, அவ்வப்போது உயிரிழப்புகள், வன்முறைகள் என இவை அனைத்துமே "என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகக்கூடிய" ஏக இறைமையுடைய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யத்தான் செலவிடப்படுகின்றது.
ஜனாதிபதிக்கான இதர செலவுகள்
இவ்வளவு பணத்தைக் கொட்டித் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதிக்கான இதர செலவுகள், அவரை மக்கள் தெரிவுசெய்த பின்னரே ஆரம்பிக்கும். அந்த செலவுக்கான பணத்தை அவர் இளமைக்காலத்தில் உழைத்து சேமித்து வைத்த பணத்திலிருந்தோ, பாட்டன் காலத்து சொத்துக்களிலிருந்தோ தான் ஆரம்பிக்கவேண்டும். ஆனால் துயரம் என்னவெனில் அடுத்துவரும் ஐந்து வருடங்களுக்கு அதிசொகுசாக வாழ்ப்போகும் ஜனாதிபதிக்கான இதர செலவுகளையும் அப்பாவி மக்களே பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜனாதிபதி மாளிகை, அதன் கவனிப்பு, ஜனாதிபதிக்கான பாதுகாப்பு, உணவு, மருத்துவம், தனிப்போக்குவரத்துப் பிரிவு, ஜனாதிபதி செயலகப் பராமரிப்பு, அதன் பணியாளர்களுக்கான கொடுப்பனவு, ஜனாதிபதியின் சிறப்புக் கூட்டங்கள், தேசிய வேலைத்திட்டம் எனப்படும் பரப்புரைகள், ஜனாதிபதி பெளத்தத் துறவிகளுக்கு அளிக்கும் அன்பளிப்புகள், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள் என இதர செலவுகளுக்கான பட்டியலும் அடிமுடியற்றது.
பாதுகாப்புக்கான செலவீனம்
இவ்வளவு பெரும்செலவைக் கொடுத்து அதிகாரக் கதிரையில் அமர்த்திவிடப்பட்ட இலங்கையின் இதுவரைக்குமான எட்டு ஜனாதிபதிகளும் என்ன செய்திருக்கின்றனர்? அனைவருமே நாட்டின் பாதுகாப்பு விடயத்துக்குப் பொறுப்பாக இருந்திருக்கின்றனர். முப்படைகள், அவர்களுக்கான பராமரிப்பு செலவுகள், அவர்களுக்கான பயிற்சிகள், ஆயுதக் கொள்வனவு என ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தேசிய பாதுகாப்புக்கான செலவும் மக்கள் தொகையுடனும், வருவாயுடனும் ஒப்பிடும்போது மிக அதிகம்.
வருடந்தோறும் நிறைவேற்றப்படும் பட்ஜெட்டுக்களில் அதிக நிதி ஒதுக்கீடும் பாதுகாப்பிற்கே ஒதுக்கப்படுகிறது. அதாவது ஜனாதிபதியின் அமைச்சுக்குத்தான் அதிக நிதியும் தேவைப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு வரையில் போர் நடத்துவதற்கு அதிக நிதி தேவைப்பட்டது, 2009 ஆண்டுக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அதிக நிதி தேவைப்பட்டது.
ஜனாதிபதியின் வழிநடத்தலின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போரின் எதிரிகளும் இத்தீவில் வாழும் இன்னொரு தொகுதி மக்கள்தான். எனவே அவர்களைக் கொன்றொழிக்க அதிக பயன்படுத்தப்பட்டது.
மகாவலி - பெளத்தத்திற்கான செலவீனம்
அதற்கடுத்து மகாவலி அபிவிருத்தி, பெளத்த கலாசாரம் போன்ற அமைச்சுக்களையும் அனேக ஜனாதிபதிகள் தம் வசம் வைத்திருந்திருக்கின்றனர். இலங்கையில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் முகமாக சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடனேயே மகாவலி அபிவிருத்தித்திட்டம் ஐந்தாண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை வைத்து தமிழர் பகுதிகளில் தமிழ் இனப்பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் அரசியலை செய்யலாம் என்கிற எண்ணம் தோன்ற அதுவும் ஜனாதிபதிகள் முன்னெடுக்கும் அடிமுடி தெரியா திட்டங்களில் ஒன்றாகியது.
இன்றைக்கு இரணைமடு வரைக்கும் மகாவவில் திட்டம் வந்து நிற்கிறது. அடுத்து யாழ்ப்பாணம் வரைக்கும் மகாவலி பாயக்கூடும். இத்தனைக்கும் மகாவலி ஆற்று நீர் இதுவரைக்கும் அநுராதபுரத்தைக்கூடத் தாண்டவில்லை. மகாவலி ஆற்று நீரைத் தீர்த்தம் போல எடுத்துவந்து எங்கெல்லாம் சிங்களக் குடியேற்றங்களைச் செய்யவேண்டுமோ அங்கெல்லாம் அத்தீர்த்தத்தைத் தெளித்துவிட்டு இது மகாவலி அபிவிருத்தி வலயம் என்கின்றனர். இந்தத் துறைக்கான கவனிப்பை அதிகக் கவனிப்பை மைத்திரிபால செய்தார்.
அதேபோல பெளத்த சாசன பாதுகாப்பு, நலனோம்பு போன்ற விடயங்களும் ஜனாபதியின் கீழேயே இருந்திருக்கின்றன. பெளத்த சாசன பாதுகாப்பின் கீழேயே தொல்லியல் திணைக்களமும் வருகின்றது. மூவினங்களும், மும்மதங்களும் வாழும் நாட்டில் பெளத்த விகாரையை மட்டும் தன் அமைப்பின் அடையாளமாகக் கொண்டியங்கும் தொல்லியல் திணைக்களம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் என்ன செய்கிறது என்பதை உலகமே அறியும்.
உதாரணத்திற்கு,
தற்போதைய ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்லியல் மையங்களை அடையாளம் காணவும் பாதுகாக்கவும் ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவின் தலைவராக பெளத்தத் துறவிகளையே நியமித்தார். அந்தளவுக்கு பெளத்த நலன்சார்ந்த அறிவியல் துறையாக தொல்லியல் திணைக்களம் தன்னை வகிபங்குபடுத்தியிருக்கிறது.
எனவே இந்த இரு அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் இனமுறுகலை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களுக்கும் ஜனாதிபதியும் பொறுப்புச்சொல்லக்கூடியவராவார். ஆனால் இலங்கையின் இனச்சிக்கலை ஆழப்படுத்தும் விடயத்தில் இதுவரையான ஜனாதிபதிகள் எப்போதும் ஐந்து லீட்டர் பெட்ரோல் கலனுடனேயே நின்றிருக்கின்றனர்.
குற்றங்களிலிருந்து விடுதலையளிக்கும்
இலங்கை அரசியலில் ஈடுபடுபவர்களில் குற்றமிழைப்பவர்கள் இரண்டு நிலைகளில் இருக்கின்றனர். முதலாவது, அரசியலுக்கு வருமுன் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்ற தண்டனை பெற்றவர்கள், இரண்டாவது அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பின்னர் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்ற தண்டனைகளையும், விசாரணைக்குழுக்களின் விசாரணைகளையும் எதிர்கொண்டவர்கள். இந்த இரு தரப்பில் ஏதாவதொன்றில் அகப்பட்டவர்கள் இலங்கையின் ஜனாதிபதிகளாக வலம் வந்திருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்திவருகின்றனர். ஒரு முன்னாள் ஜனாதிபதியையே விசாரிக்க முடியாதளவுக்குப் பலத்தை இந்த ஜனாதிபதி முறைமை வழங்கியிருக்கிறது.
இதுவரைக்கும் இலங்கை ஜனாதிபதியொருவர் நாட்டு நீதிமன்றம் ஒன்றின் முன் தோன்றி விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் இடம்பெற்றமைக்கு ஆதாரங்கள் இல்லை. ஆகவே ஜனாதிபதி முறைமை என்பது குற்ற நீக்கத்தையும் சேர்த்தே வழங்கி, ஒரு மனிதனைத் தன்னியல்பாகத் தூய்மைப்படுத்திவிடுகிறது.
ஆகவே தற்போதைய பொருளாதார சரிவைப் பயன்படுத்தி நிகழ்த்தவேண்டிய மாற்றங்களுல் ஜனாதிபதி முறைமை நீக்கமும் முதன்மையானது. இலங்கையில் ஜனாதியாகும் கனவுடம் அரசியலில் இருக்கும் எந்தக் கட்சியும், நபரும் ஜனாதிபதி முறைமை நீக்கத்திற்கு ஆதரவாகக் களத்தில் இறங்கமாட்டார்கள். அவர்கள் செய்யப்போவதெல்லாம், ஜனாதிபதிக்கு அதிகாரம் ஏக வழங்கும் திருத்தத்தை திருத்துவது, அதில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது மட்டும்தான். அதனால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை. பணமே பலமாக இருக்கும் ஆட்சி முறைமை சூழல் ஒன்றினுள் எத்தனை யாப்புக்களை வேண்டுமானாலும் கொண்டுவரலாம்.
இன்று ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைக்க கையுயர்த்தி நிற்கும் இதே நாடாளுமன்றம் தான் ஒரு வருடத்திற்கு முன்பு 20 ஆம் திருத்தத்திற்கு அமோக வரவேற்பளித்தது. எனவே அந்த நாடக மேடையின் காட்சி எப்படி வேண்டுமானாலும் மாறும். நடிகர்கள் மாறிக்கொண்டிருப்பர்.
இலங்கை போன்று சொந்த
மக்களது உழைப்பின்றி அந்நிய நாடுகளின் கடன்களில் வாழும் நாட்டிற்கு ஒரு
நாடாளுமன்றமே போதுமானது. அது காட்டும் வேடிக்கைகளைப் பார்க்கவே கண்கள் கோடி
தேவைப்படும் நிலையில், வீண் செலவுகளையும், இனக்குரோதத்தையும்
விதைத்திருக்கின்ற ஜனாதிபதி முறைமை தேவையற்றது.