வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை - ஜனாதிபதியின் புதிய திட்டம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் கீழ், இலங்கை நாட்டவர் ஒருவர் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவரது வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினருக்கு எவ்விதக் கட்டணமுமின்றி இரட்டை குடியுரிமையை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
2027 வரவு செலவுத் திட்ட உரையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த முன்மொழிவை அறிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்ட உரையின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினரை இலக்காகக் கொண்டு, "உலகளாவிய இலங்கை மரபு வழி குடிமக்கள்" (Global Sri Lankan Heritage Citizen) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை
இந்தத் திட்டத்தின் கீழ், இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினர், எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் இரட்டை குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது சந்ததியினரின் அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை நாட்டின் எதிர்கால அபிவிருத்தியுடன் இணைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கும், அவர்களின் பூர்வீக தாயகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுடனான ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக, 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.