வெளிநாடொன்றில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட இலங்கை குடும்பம் - பெருந்தொகை டொலர் கப்பம் கோரல்
இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று இலங்கையர்கள் பங்களாதேஷில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷுக்கு வணிக பயணத்தில் இருந்தபோது குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின்னர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பம் கோரியுள்ளனர்.
தகவல் கிடைத்தவுடன் உடனடியாக பதிலளித்த இலங்கை அதிகாரிகள், பங்களாதேஷ் அதிகாரிகளிடம் உதவி கோரினர்.
இலங்கை குடும்பம்
மேலும் விரைவான நடவடிக்கையின் காரணமாக மூன்று இலங்கையர்களையும் மீட்டுள்ளனர். ஏற்றுமதி வணிகம் தொடர்பான பணிக்காக வந்த அழைப்பைத் தொடர்ந்து அவர்கள் சமீபத்தில் பங்களாதேஷுக்குச் சென்றிருந்தார்.
பங்களாதேஷ் சென்றவுடன், அவர்கள் கடத்தப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர்களை விடுவிப்பதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கடத்தல் செய்தி இலங்கைக்கு கிடைத்தவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுனில் சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, தேசிய புலனாய்வு இயக்குநர் ருவான் வணிகசூரிய உள்ளிட்ட குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
மீட்பு நடவடிக்கை
இது குறித்து பங்களாதேஷ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்தப் பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் பங்களாதேஷுக்கான இலங்கைத் தூதர் தர்மபால வீரக்கொடி முக்கிய பங்காற்றியுள்ளார்.
இதையடுத்து, பங்களாதேஷ் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு, கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மூன்று இலங்கையர்களை மீட்டனர்.
அவர்கள் தற்போது பங்களாதேஷ் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் இன்றைய தினம் இலங்கை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
